
தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் அஸ்லாம் பாஷா, சென்னை கீழ்ப்பாக்கம் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை சென்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவரா? அவரின் நடவடிக்கை மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்றுள்ளது எனவே அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து அவரை முழுவதும் சோதித்து தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கீழ்ப்பாக்கம் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை மருத்துவர்களிடம் சந்தித்து மனு அளிக்க இன்று காலை சென்றார்.
மனநல காப்பக இயக்குநர் பூர்ணசந்திரிகாவிடம் மனுவை பெற்றுக்கொள்ளுமாறு கூறினர். ஆனால் அவர் மனுவை வாங்க மறுத்துவிட்டார். தனி நபர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நாம் முடிவு செய்திட முடியாது. காவல் நிலையத்திற்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ சென்று முறையிட்டு சிகிச்சைக்கு அனுமதி பெறலாம் என்று கூறி மனுவை வாங்க மறுத்து விட்டார். மேலும் புகார் மனு கொடுக்க வேண்டிய இடமும் இதுவல்ல என்று அவர்களை அனுப்பி வைத்தார்.
அண்மையில் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்திருந்தார். அப்போது, ராகுல் காந்திப் பற்றி ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்துக்களை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்கள் அடிமைகளாக இருந்தனர். இப்போது அமைச்சர்கள் கோமாளிகளாக மாறிவிட்டனர். தமிழகம் முழுவதும் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து புதன்கிழமை (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.
இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை மருத்துவர்களிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு அளிக்க சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.