Skip to main content

இதை செய்யாத வரை, மக்களை மோடி அரசால் காப்பாற்ற முடியாது... கே.எஸ்.அழகிரி

Published on 25/05/2020 | Edited on 25/05/2020
ks alagiri - Congress




தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி அறிவித்த நிவாரணம் ரூபாய் 20 லட்சம் கோடி, உண்மையில் கணக்கிட்டால் ரூபாய் 1 லட்சத்து  86 ஆயிரத்து 650 கோடி தான். இது மொத்த ஜிடிபியில் 0.91 சதவிகிதமே தவிர 10 சதவிகிதம் அல்ல.


பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 2018-19 இல் 5.87 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், 2019-20 இல் 2.57 லட்சமாக அது குறைந்துள்ளது.

வறுமை ஒழிப்புத் திட்டமான தீனதயாள் அந்தியோதயா யோஜ்னா-தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், 2018-19 ஆம் ஆண்டு புதிய வேலைவாய்ப்புகள் 1.78 லட்சத்திலிருந்து 44 ஆயிரத்து 66 ஆக 2019-20 இல் குறைந்துள்ளன.

 
இந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த செயல்திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. இதிலிருந்து இந்தியாவை மீட்டு, மீண்டும் தொழில் உற்பத்தியை பெருக்குவதற்கு மத்திய அரசு மேலும் அதிக நிதியை ஒதுக்கவேண்டும். வெறும் அறிவிப்புகளால் எந்தப் பலனும் ஏற்படாது. மக்களிடையே வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு நிதியை ஒதுக்க வேண்டும். இதை செய்யாதவரை பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை மோடி அரசால் காப்பாற்ற முடியாது.

 

 

Narendra Modi



 
மனித இனம் இதுவரை காணாத வகையில் கரோனா தொற்று காரணமாக அச்சம் பீதியால் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் வேலைவாய்ப்பு, வருமானத்தை இழந்து வாழ்வாதாரமே மிகப்பெரிய கேள்விக் குறியாகிவிட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி 136 கோடி மக்களுக்கு மொத்த உள்நாட்டு மதிப்பில் 10 சதவிகிதமான ரூபாய் 20 லட்சம் கோடி தொகுப்பு நிவாரண திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்தின் விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நான்கு கட்டங்களாக வெளியிட்டார். அறிவிக்கப்பட்டது ரூ 20 லட்சம் கோடி நிவாரண திட்டமல்ல, அனைத்து அறிவிப்புகளையும் கணக்கிட்டால், ரூபாய் 1 லட்சத்து 86 ஆயிரத்து 650 கோடி தான் மத்திய அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என்று நிதியமைச்சரின் அறிவிப்பை ஆய்வு செய்த பொருளாதார வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள். உண்மையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.91 சதவிகிதமே தவிர 10 சதவிகிதம் அல்ல. இதனால் நாட்டு மக்களிடையே பெருத்த ஏமாற்றமும், எதிர்காலம் குறித்து கடும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

 
நாட்டில் நிலவும் அசாதாரண சூழலின் காரணமாக 13 கோடி 50 லட்சம் பேர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டின் வளர்ச்சி விகிதம் 1 சதவிகிதத்திற்கு கீழே பூஜ்ஜியத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால், நாட்டு மக்களில் எவரும் பாதிக்கப்படாதவர்களே இல்லை என்ற நிலை ஏற்படப் போகிறது.  இந்நிலையில் மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் எதிர்பார்த்த பலனை தராமல் மக்களை கடுமையாக பாதித்து வருகின்றன.


பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், தீனதயாள் அந்தியோதயா யோஜ்னா-தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் போன்றவற்றில், முதன்மையான வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் வேலை வாய்ப்புகள் இந்த நிதியாண்டில் கடுமையாக குறையும் என நாடாளுமன்றத்தில் மத்திய தொழிலாளர் மறறும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தாக்கல் செய்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 2018-19 இல் 5.87 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், 2019-20 இல் 2.57 லட்சமாக குறைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்றபின், பல மாநிலங்களில் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன. 2019-20 இல் இதுவரை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு உருவாக்குதல் பெருமளவு குறைந்துள்ளது.

வறுமை ஒழிப்பு திட்டமான தீனதயாள் அந்தியோதயா யோஜ்னா-தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், 2018-19 ஆம் ஆண்டு புதிய வேலைவாய்ப்புகள் 1.78 லட்சத்திலிருந்து 44 ஆயிரத்து 66 ஆக 2019-20 இல் குறைந்துள்ளன. குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடப்பு நிதியாண்டில் இதன் அளவு பெருமளவு குறைந்துள்ளது.

 

nakkheeran app




காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தொடங்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலும் வேலை வாய்ப்பு கடுமையாக குறைந்தது. 2018-19 இல் 26 ஆயிரத்து 796  மனித நாள்களிலிருந்து இருந்து 20 ஆயிரத்து 577 ஆக வேலைவாய்ப்பு குறைந்தது. இதனால் கிராமப்புற பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கவுசல்யா யோஜ்னாவின் கீழ், 2018-19 இல் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பெற்றோரின் எண்ணிக்கை குறைந்ததுள்ளது. பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கை 2.4 லட்சத்திலிருந்து 1.74 லட்சமாகவும், வேலைவாய்ப்பு 1.35 லட்சத்திலிருந்து 1.10 லட்சமாகவும் குறைந்துள்ளது. இந்த மத்திய அரசின் திட்டங்களில் வேலை வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை போல, மாநிலங்களிலும் இத்தகைய பாதிப்புகளிலிருந்து தப்பமுடியவில்லை.

இந்நிலையில் இந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த செயல்திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. இதிலிருந்து இந்தியாவை மீட்டு, மீண்டும் தொழில் உற்பத்தியை பெருக்குவதற்கு மத்திய அரசு மேலும் அதிக நிதியை ஒதுக்கவேண்டும். வெறும் அறிவிப்புகளால் எந்தப் பலனும் ஏற்படாது. மக்களிடையே வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு நிதியை ஒதுக்க வேண்டும். இதை செய்யாதவரை பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை மோடி அரசால் காப்பாற்ற முடியாது. இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்