மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையான மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிலையில், எடப்பாடி எடுத்துள்ள முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா.
அந்த அறிக்கையில், "தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம அடிப்படைத் தன்மைகளோடு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையைத் தமிழகம் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை வைத்தன.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும், புதிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கும் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படாது என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் புதிய கல்விக் கொள்கையின் பேரபாயங்கள் குறித்து ஏதும் கூறாததும், அதை முற்றிலுமாக நிராகரிக்கிறோம் என்று அறிவிக்காததும் ஏமாற்றம் அளிக்கின்றது.
மருத்துவக் கல்விக்கு மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த நீட் (NEET) தேர்வு முறையின் அபாயங்களைத் தமிழக அரசு நன்றாக உணர்ந்தே அதை எதிர்த்துத் தீர்மானம் போட்டது. அப்பாவி மாணவர்களின் உயிர்களைப் பறித்த மனுவாத அடிப்படைக் கொண்ட நீட் தேர்வால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் மாநிலக் கல்வி வாரியத்தில் (State Board) படித்த மாணவர்களின் மருத்துவராகும் கனவில் மண்ணள்ளிப் போடப்பட்டது கண்கூடு.
இதே நீட் தேர்வு முறையை ஒவ்வொரு பட்டப் படிப்புக்கும் புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்துகிறது. மாணவர்கள் கல்லூரிக் கல்வியில் இணைய NTA தேசியத் தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்கிறது புதிய கல்விக் கொள்கை.
பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களின் விழுக்காடு (Gross Enrollment Ratio) 49% ஆக தமிழகம் உள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவின் விழுக்காடே 26.3% தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. ஆளும் கர்நாடகாவில் 28% ஆகவும், பா.ஜ.க.வின் சோதனைச் சாலையான குஜராத்தில் இது வெறும் 20% ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை அழித்தது போல உயர்கல்வி சேர்க்கையின் உயர் விழுக்காட்டையும் அழிப்பதே புதிய கல்விக் கொள்கையின் முக்கியக் கூறாகும்.
பள்ளிக் கல்வியில் 3, 5, 8 -ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு என்ற பெயரில் மன உளைச்சல் தருவதையும், தொழிற்கல்வி என்ற பெயரில் மாணவர்களைக் குலக்கல்வி முறையில் குப்புறத் தள்ளுவதையும் கூறுகளாகக் கொண்டுள்ள இந்த கூறு கெட்டக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக நிராகரித்திட வேண்டும்.
மேலும், உயர் கல்வியில் மகத்தான சாதனைப் படைத்துள்ள திராவிட அரசுகளின் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக மத்திய அரசு ஏற்று அறிவித்திட தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்" என்று எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.