“ஓபிஎஸ் கூட்டுகிற பொதுக்குழு ஒரு பொருட்காட்சி அவ்வளவுதான்” என ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்கச் சொன்னார்கள். ஆனால் அதற்கு நீண்ட நெடிய காலம் அவகாசம் கொடுத்தார்கள். இன்றைக்கு இருக்கிற அமைச்சர் சில நாட்கள் கூடுதலாக வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதனுடைய நோக்கம் என்ன என்பது குறித்து இன்னும் இந்த அரசு எந்த கொள்கை விளக்கத்தையும் கொடுக்கவில்லை.
ஆதார் கார்டை மின் இணைப்புடன் இணைப்பதற்கு என்ன காரணம் என்று சொன்னால் நான்கு பேர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் 100 யூனிட்,100 யூனிட் என தனித்தனியாக கிடைக்கும். வாடகை வீட்டுக்காரர்கள் அடிக்கடி மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. வாடகைக்கு குடியிருப்பவர் தான் அந்த மின் கட்டணத்தைச் செலுத்துவார்கள். இன்றைக்கு இவர்கள் இப்படி செய்வதன் காரணமாக வாடகைக்குக் குடியிருப்பவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத்தை கட் பண்ணுவதற்கு இன்றைக்கு முயற்சி மேற்கொண்டு இருக்கிறார்கள். ஏமாற்றுகிறார்கள் என்று சொல்கின்ற அளவிற்கு அரசாங்கமே முன்னின்று மக்களை ஏமாற்றுகிற முயற்சியில் இறங்கி இருக்கிறது. இதை மக்கள் புரிந்துகொண்டு அடையாளம் காட்ட வேண்டும்.
ஓபிஎஸ் என்ன புதிய கட்சி ஆரம்பித்து பொதுக்குழுவைக் கூட்டப்போகிறாரா? புதிதாகக் கட்சி ஆரம்பித்து அவர் பொதுக்குழுவைக் கூட்டினால் எங்களுக்கு என்ன வேண்டி இருக்கிறது. அவரைப் பொறுத்தவரை எங்களுக்கு அவர் தனிக் கட்சிதான். அவர் அதிமுக இல்லை. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுவிட்டவர். எனவே அவர் என்ன பொதுக்குழு கூட்டினாலும் அது அதிமுக பொதுக்குழு அல்ல. அது ஓபிஎஸ் கட்சியினுடைய பொதுக்குழு. அந்தப் பொதுக்குழுவால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. எந்தப் பிரச்சனையும் இல்லை. அதற்காக நாங்கள் கவலைப்படப் போவதுமில்லை. அவர் கூட்டுகிற பொதுக்குழு வேடிக்கையான பொதுக்குழு; வினோதமான பொதுக்குழு; ஒரு பொருட்காட்சி, எக்ஸிபிஷன் அவ்வளவுதான்.'' என்றார்.