மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில், “ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது வெளியான மருத்துவ அறிக்கைகளில் பல்வேறு முரண்பாடுகள் இருந்துள்ளன; சாட்சியங்கள் அடிப்படையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் நான்காம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள் இருக்கலாம்” என ஆறுமுகசாமி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அறிக்கையில், “எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை; சசிகலா வெளியேற்றப்பட்டு 2012-ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து இருவர் இடையே சுமூகமான உறவு இல்லை; சசிகலாவை குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது.
அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார்; அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரசல் பரிந்துரைத்தபடியும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்யப்படவில்லை. சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூகமான உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம்” எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வில், “ஆய்வு வரம்பின் பிற்பகுதியை பொறுத்த வரையில் வி.கே. சசிகலா, கெ.எஸ்.சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து இவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்திலும் முக்கியமாக “எக்சோ சிகிச்சை நிபுணர் சாட்சியத்தின் படி டிசம்பர் 4 ம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு அவர் இறந்தது உறுதி. அதன் பிறகு ஜெயலலிதாவிற்கு இதய துடிப்பு எதுவும் இல்லை. ஆனால், ஜெயலலிதா 2016 டிசம்பர் 4ம் தேதி மரணமடைந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் டிசம்பர் 5 ம் தேதி இரவு இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது” என ஆணையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் ஆறுமுக சாமி ஆணையத்தின் அறிக்கையில், ஜெயலலிதா இறந்த நேரத்தை கருத்தில் கொண்டே ஜெயலலிதாவிற்கு அவரது சகோதரர் மகன் ஜெ.தீபக் முதலாமாண்டு திதி கொடுத்தார் என பஞ்சாங்க ஆவணத்தையும் மேற்கோள்காட்டியுள்ளது.