ஆந்திராவில் ஜெகன்மோகனின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து ஆட்சியமைத்துள்ளது.
இந்நிலையில் நேற்று ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒருவர் என ஐந்து துணைமுதல்வர்கள் நியமிக்கப்படுவர் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும் 25 அமைச்சர்கள் பொறுப்பேர்ப்பார்கள் அவர்களின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் அதற்குபிறகு மீண்டும் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் எனவும் அதிரடியாக அறிவித்தார்.
அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவருவது சாதாரண நடைமுறைதான் ஆனால் ஒட்டுமொத்த அமைச்சரவையையும் மாற்றுவது இதுவே முதல்முறை, அதேபோல் ஐந்து துணை முதல்வர்கள் என்ற அறிவிப்பும் இதுவே முதல்முறை. இப்படியாக ஆட்சிக்குவந்த சிலநாட்களிலேயே இப்படியான அதிரடி அறிவிப்புகளைவிட்டு இந்தியாவையே ஆச்சர்யபடுத்தியுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்திலேயே இரண்டு துணை முதல்வர்கள்தான் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்களை முடிவுசெய்யும்போதே அவர்களிடம் ஒரு கண்டிஷன் வைத்துவிட்டார் ஜெகன்மோகன். அதாவது, அமைச்சரவையில் இருப்பவர்களின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள்தான் அதற்கு பிறகு புதிய அமைச்சரவை அமைக்கப்படும். இதற்கு ஒத்துக்கொண்டால் அமைச்சராக பதவி வகியுங்கள், இல்லையென்றால் இப்போதே விலகிக்கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டாராம். அதற்கு ஒத்துக்கொண்டுதான் அமைச்சர்கள் இன்று பதவியேற்கின்றனராம்.
என்னடா இது எட்டு வருட போராட்டத்திற்கு பிறகு ஆட்சி அமைத்திருக்கிறோம். ஆனால் இப்படி முழுமையாக அனுபவிக்க முடியாமல் போய்விட்டதே என சில அமைச்சர்கள் புலம்பி வருகின்றனர். சிலர் இதற்கு சரி எனவும் கூறியுள்ளனர். இப்படியாக அதிரடி அறிவிப்புகளை வெளியிடும் ஜெகன்மோகன் அடுத்தடுத்து என்ன அறிவிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.