எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளில் இல்ல விழாக்களில் கலந்து கொள்வதற்காக திருச்சி சென்றார். திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களில் குறித்து வெளிவந்த செய்தி வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நான் தொடர்ந்து ஊடகங்களின் வாயிலாக அறிக்கைகளின் வாயிலாக தெரிவித்து வந்தேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இப்படிப்பட்ட கொடுமைகளை தமிழக மக்கள் சந்திக்க வேண்டி உள்ளது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருகி உள்ளது என்றும் சட்டமன்றத்தில் காவல்துறை மானியக்கோரிக்கையில் நான் பேசி இருந்தேன். இதையெல்லாம் அரசாங்கம் சரியான முறையில் கவனத்தில் எடுத்திருந்தால் இச்சம்பவங்களை தடுத்து நிறுத்தி இருக்கலாம். சில பத்திரிக்கைகளில் மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக செய்திகள் வெளி வந்தன. அப்போதாவது இந்த அரசு விழித்துக்கொண்டு வேகமாக துரிதமாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது. இதற்கெல்லாம் முழு பொறுப்பு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான். ஆகவே முதலமைச்சர் தார்மீகமாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் ஆட்சி ஏற்றபின் தொடர்ந்து தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
கஞ்சா ஒழிப்பில் டிஜிபி முதலில் 2.0 என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 3.0 என அறிவித்தார். இப்போது 4.0 என அறிவித்துள்ளார். இப்படி ஓ போடுவதுதான் வழக்கமே ஒழிய சட்டரீதியில் கடுமையாக நடவடிக்கை எடுத்து கஞ்சா போன்ற போதைப் பொருட்களை தடை செய்ய முடியவில்லை” எனக் கூறினார்.