தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையின் தீவிர ரெய்டுகளில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பினாமிகள் எனப் பலரும் சிக்கிவருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், தமிழ்நாட்டில் அவருக்கு சொந்தமான 60 இடத்திற்கும் மேலான இடங்களில் சோதனையானது மேற்கொள்ளப்பட்டது.
அதில், 13 லட்சம் பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேபோல், சோதனை நடைபெற்ற அனேக இடங்களில் மக்களின் கூட்டமும் மிகுதியாக காணப்பட்டது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையினரால் மேற்கொள்ளப்படும் இந்த திடீர் ரெய்டுகளுக்கு அதிமுக தரப்பில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பாக பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்துவருகிற நிலையில், திராவிட இயக்கப் பேச்சாளரும், சிந்தனையாளருமான நாஞ்சில் சம்பத்தை சந்தித்து இதுகுறித்த பல முக்கிய கேள்விகளை முன்வைத்தோம். அதில் ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...
‘உள்ளாட்சித் துறையில் இருக்கும்போது அதிக விருதுகளைப் பெற்றுள்ளோம். அதேபோல் பல்வேறு பணிகள் எல்லாம் செய்துள்ளோம். மேலும், அதிக சாலை கட்டுமானப் பணிகளைச் செய்துள்ளோம். அதற்காகத்தான் மக்கள் நன்றியுணர்வோடு இருந்தார்கள்’ என எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார். அதை எப்படி பார்க்கிறீர்கள்?
நீங்கள் கோவைக்குப் போனால் தெரியும். காந்திபுரம் என்கிற இடத்தில்தான் பேருந்து நிலையம் உள்ளது. அதற்கு மேலாக பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்தப் பாலம் வந்து இறங்குகிற இடத்தில் பேருந்து நிலையம் எதுவும் இல்லை. நான் ஆர்ப்பாட்டத்திற்காக குறிச்சி என்கிற இடத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு பாலம் அப்படியே பாதிக்கு மேல் கட்டப்படாமல் அந்தரத்தில் பாதிலேயே நிற்கிறது. அது வேலுமணிக்கு நாளை குதிக்க பயன்படுமே தவிர, வேறெதற்கும் பயன்படாது. எதற்கு அந்தப் பாலம் அவ்வாறு பாதி கட்டாமல் நிறுத்தப்பட வேண்டும்? அதிலேயே தெரிகிறது, அவர் கோவைக்கு எதுவுமே செய்யவில்லை என்று. அதேபோல் உள்ளாட்சித்துறையை ஊழல் துறையாக மாற்றி, பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கொள்ளையடித்து, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அவற்றை மோடி மற்றும் அமித்ஷாவுக்கு கொடுத்துள்ளனர்.