யோகா, நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான ஆன்லைன் பயிற்சியின்போது, இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என ஆயுஷ் அமைச்சகச் செயலாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மொராஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் இணைந்து கடந்த 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை யோகா, நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான ஆன்லைன் பயிற்சி வழங்கின. இதில் தமிழகத்திலிருந்து 37 மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதிலும் இருந்து 350க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது, ஆயுஷ் அமைச்சகச் செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசினார். அப்போது, இந்தி தெரியாத மருத்துவர்கள் ஆங்கிலத்தில் பேசக் கூறினர். ஆனால், "இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள்" என வகுப்பில் பங்கேற்ற மருத்துவர்களிடம் ராஜேஷ் கொடேஜா தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவி சர்ச்சையாகியது.
இந்நிலையில் இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் எனக் கூறிய மத்திய ஆயுஷ் அமைச்சகச் செயலரின் கருத்துக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மத்திய ஆயுஷ் அமைச்சகச் செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில், இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தித் திணிப்புக் கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது.
இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு, உடனடியாக அந்தச் செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப் படுவதை, பொறுத்துக்கொள்ளப் போகிறோம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.