கோப்புப்படம்
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது குறித்து நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்.
அப்போது அவர்,
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கலைஞரின் மகன் என்ற காரணத்தினால் அந்த பொறுப்புக்கு அவர் வந்ததாக நான் கருதவில்லை.
கலைஞர் எப்படி இளம் வயதில் அரசியலில் ஈடுபட்டாரோ, அதைப்போலவே ஸ்டாலினும் தனது 14வது வயதில் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, பின்னர் படிப்படியாக பொதுக்குழு உறுப்பினராக, கட்சியின் பொருளாளராக, கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைப்போலவே சென்னை மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல் அமைச்சராக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.
ஆகவே அவரது சொந்த முயற்சியாலும், கடும் உழைப்பாலும், நல்ல சிந்தனையாலும் படிப்படியாக முன்னேறி இந்த பொறுப்புக்கு வந்திருக்கிறார். கலைஞர் தனது வாழ்நாளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உயர்வுக்காக, முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர். அதேபோல மதசார்பற்ற கொள்கையில் மிகந்த நம்பிக்கை உடையவர். சமூகநீதிக்கான போராட்டங்களில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர். அதேபோல சமத்துவ சமுதாயம் காணவேண்டும் என்பதற்காகவும் போராடியவர்.
கலைஞரின் வழியில் அந்த உயரிய லட்சியங்களை ஏற்று ஸ்டாலினும் செயல்படுவார் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. அந்த பாதையில் அவருடைய பயணம் தொடர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.