சென்னை மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டம் திருவள்ளூரில் இன்று நடைபெற்றது. அதே சமயம் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டு, மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் ஓய்வில் இருந்து வருகிறார். எனவே இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்வரின் உரையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் முன்பு வாசித்து காட்டினார்.
அதில், “பாஜக, ரெய்டுகள் மூலம் அதிமுகவை மிரட்டி நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியது போல் திமுகவையும் மிரட்டலாம் என பகல் கனவு காண்கிறது. இந்த சலசலப்புகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் பயப்படும் இயக்கம் அல்ல திமுக. இதையெல்லாம் 75 ஆண்டுகளாக எதிர்த்து நின்றுதான் வெற்றி பெற்றுள்ளோம். அந்த வெற்றி என்றைக்கும் தொடரும். வருமான வரித்துறைக்கும், அமலாக்கத்துறைக்கும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும்தான் கண்களுக்கு தெரிகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் அவரவர் அலுவலகத்தை விட்டுக்கூட வருவதில்லை. ஆனால் தமிழகத்தில் திமுகவினர் ஒவ்வொருவராக சோதனை செய்கிறார்கள். இப்போது அமைச்சர் வேலுவை சோதனை செய்கிறார்கள். இப்படி, வருமானவரித்துறை, அமலாக்கத்துறையின் ரெய்டுகளில், வழக்குகளில் அளிக்கப்படும் தண்டனை விகிதம் (Conviction Rate) எவ்வளவு என்று பார்த்தால், அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் ஒரு விழுக்காடு கூட இல்லை. வெறும் அரசியல் பழிவாங்கலுக்கான, பாஜகவின் கூட்டணிக் கட்சிகள்தான் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும். அதனால்தான் வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மிக மிக முக்கியம் என்று சொல்கிறேன். இந்தத் தேர்தலில் நாம் பெறப்போகிற வெற்றி என்பது, மகத்தான வெற்றியாக இருக்க வேண்டும்.
கொள்கை என்று எதுவுமே இல்லாமல், ஊழல் மட்டுமே அச்சாணி என்று ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை நாசப்படுத்திய அ.தி.மு.க.வும், தமிழ்நாட்டின் எல்லா உரிமைகளையும் பறித்து தமிழ்நாடு என்ற அடையாளத்தையே சிதைக்க நினைக்கும் பா.ஜ.க.வும், சுயநலத்தின் காரணமாக இந்த இரு கட்சிகளுக்கும் துணை போகும் அதன் கூட்டணிக் கட்சிகளும், வெளிப்படையான கூட்டணியாக வந்தாலும் சரி, மறைமுகக் கூட்டணியாக வந்தாலும் சரி, தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது. இது, கலைஞரின் உடன்பிறப்புகளான உங்கள் கையில்தான் இருக்கிறது. நாற்பதுக்கும் நாற்பது என்கிற வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும். கழக உடன்பிறப்புகளாக நம்முடைய இலக்கு இதுதான். அதற்கு இன்று முதல் உழைத்தாக வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடித்தாக வேண்டும். வளமிகு இந்தியாவை உருவாக்க வேண்டும்” என தெரிவித்தார். இந்நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாகக் கலந்து கொண்டு தொடக்க உரை மட்டும் ஆற்றியது குறிப்பிடத்தக்கது.