Skip to main content

“கட்சி தொடங்கி 34 ஆண்டுகள் ஆகியும் ஆட்சிக்கு வர முடியவில்லை” - அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Anbumani Ramadoss says Even after 34 years, the party has not come to power

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் இன்று (01-02-24) நடைபெற்றது. இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில நலன் மற்றும் தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், அதுகுறித்து முடிவு செய்ய பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கியும் பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “வருகிற மக்களவைத் தேர்தலில் பா.ம.க கட்சி யாருடன் கூட்டணி என்ற முடிவு செய்கின்ற அதிகாரத்தை பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு வழங்கி இருக்கின்றோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். திமுக தொடங்கி 18 ஆண்டுகளில் ஆட்சிக்கு வருகிறார்கள். அதிமுக தொடங்கி ஐந்து ஆண்டுகளில் ஆட்சிக்கு வருகிறார்கள். ஆனால், பா.ம.க கட்சி தொடங்கி 34 ஆண்டுகள் ஆகியும், இன்னும் நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை. இன்னும் நாம் கூட்டணி என்று தான் பேசிக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலை எப்போது மாறும்?. 

தற்போது மக்களின் மனநிலை மாறிக் கொண்டிருக்கின்றது. அந்த மாற்றத்தை நாம் எல்லோரும் சேர்ந்து கொண்டு வருவோம். சமீபத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு விருதுகளை அறிவித்தார்கள். அந்த அறிவிப்பு வந்த பிறகு மிகப்பெரிய வருத்தம் எனக்கு இருந்தது. ஆனால், தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் எத்தனையோ சாதனை செய்த மருத்துவர் ராமதாஸுக்கு பாரத ரத்னா விருது வழங்கவில்லை என ஆதங்கமும் வருத்தமும் எனக்குள் இருக்கிறது” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்