ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்றது பெரிய மாரியம்மன் கோவில். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் திருவிழா நடக்கும் சென்ற இரு ஆண்டுகளாக கரோனா விதிமுறைப்படி நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 31ந் தேதி நடைபெற்றது. மாநகர மற்றும் புறநகர்ப்பகுதி மக்கள் லட்சக்கணக்கில் தொடர்ந்து இரு வாரங்கள் இக்கோவிலுக்கு வந்து செல்வார்கள். இந்த மாரியம்மன் கோவில் ஈரோட்டின் பிரதான சாலையான பிரப் சாலையில் உள்ளது. இக்கோவிலுக்குப் பின்புறம் கிருத்துவர்களின் சி.எஸ்.ஐ. நிறுவன பள்ளி, மருத்துவமனைகள் எனப் பல ஏக்கர் நிலத்தில் உள்ளது. நீண்ட காலமாக இந்து மத அமைப்புகள் பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தைத் தான் சி.எஸ்.ஐ கிறிஸ்தவ அமைப்பு ஆக்கிரமித்து வைத்துள்ளதாக மக்களிடம் பிரச்சாரம் செய்து வருவதோடு, ஒவ்வொரு வருட கோவில் திருவிழாவின் போதும் ஏதாவது ஒரு வகையில் போராட்ட அறிவிப்பை வெளியிட்டு பதட்டத்தை ஏற்படுத்துவார்கள்.
நேரடியாக பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். என்று களத்தில் இறங்காமல் 'ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம்' என்ற பெயரில் இந்த போராட்டம் நடக்கும். இவ்வருடமும் அந்த அமைப்பின் சார்பில் பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்கக் கோரி மாரியம்மன் கோவில் முன்பு 5,001 சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெறும் எனக் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்திருந்தனர்.
கடந்த 31ந் தேதி காலை முதலே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தினர் என்ற பெயரில் பா.ஜ.க, இந்து முன்னணியினர் 30-க்கும் மேற்பட்டோர் ஈரோடு ஈஸ்வரன் கோவில் முன்பு திரண்டனர். பா.ஜ.க. மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி தலைமையில் நிர்வாகிகள், 24 பேர் திடீரென பெரிய மாரியம்மன் கோவிலுக்குச் சென்று போலீஸ் தடையை மீறி 10 தேங்காய்களை மட்டும் உடைத்து விட்டு சம்பந்தமில்லாமல் 'பாரத் மாதாகி ஜெ' என கோஷம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் சரஸ்வதி எம்.எல்.ஏ உட்பட 24 பேரையும் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில் சுய விளம்பர அரசியலுக்காக மத பகைமையை உருவாக்கத் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சரஸ்வதி எம்.எல்.ஏ உள்பட 24 பேர் மீதும் ஈரோடு போலீசார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் தமிழக செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ''கோவில் திருவிழாக்களில் கம்யூனிஸ்ட்டுகளாகிய நாம் ஏன் கலந்து கொள்ளக் கூடாது?' என்று பேசிய பேச்சு வைரலாகி அது விவாதப் பொருளாகியுள்ளது. கே.பாலகிருஷ்ணனின் பேச்சு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "இது மார்க்ஸிய தத்துவத்திற்கு எதிரானது, இளைஞர்களைக் குறிப்பாக சி.பி.எம்-ல் உள்ள இளைஞர்களைக் கூட தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும். புரட்சிகர இளைஞர்களாக வார்த்தெடுப்பதற்குப் பதில் புராண சகதியில் அவர்களைத் தள்ளி விடலாமா?..." எனக் கேள்வி எழுப்பி, சி.பி.எம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதுபற்றி சி.பி.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம், "கோவில் நிர்வாகத்தில் பங்கெடுக்காமல் நாம் தள்ளி நின்றால் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அங்கு ஊடுருவி மதவெறி அரசியலைச் செய்கிறார்கள். நிர்வாகத்திலிருந்தால் அதை நாம் தடுக்கலாம் மற்றபடி பூஜை, அபிஷேகம், அதனையெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் செய்யப் போவதில்லை. அதிக மக்கள் கூடும் இடங்கள் என்றால் அது கோவில்கள், திருவிழாக்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எல்லா ஊர்கோவில் நிகழ்ச்சிகளிலும் பா.ஜ.க., இந்து அமைப்புகள் ஊடுருவி சம்பந்தமே இல்லாமல் காவிக் கொடியைக் கட்டுகிறார்கள். இதை அனுமதிக்கக் கூடாது கோவில் மூலமாக மதவெறி அரசியலைப் புகுத்தும் கும்பலை நாம் கவனமாக அப்புறப்படுத்த வேண்டும்" என்றார்.
இதுபற்றி சி.பி.ஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறுகையில், "கிராமங்களில் சிறு தெய்வ வழிபாட்டுக் கோவில் நிர்வாகங்களில் ஏற்கனவே கம்யூனிஸ்ட்டுகள் இருந்துள்ளார்கள். அதற்குக் காரணம் நிர்வாகம் நேர்மையாக நடக்கும் என்று அப்பகுதி மக்கள் நம்பிக்கையாக உள்ளார்கள். பக்தி, இறைநம்பிக்கையெல்லாம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எப்போதும் கிடையாது. அதிக மக்கள் கூடுமிடத்திலுள்ள கோவிலுக்குள் மதவாத சக்திகள் ஊடுருவாமல் அதைத் தடுக்க வேண்டும். சி.பி.எம்.பாலகிருஷ்ணன் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே மார்க்சிய தத்துவத்தின் படி செயல்படுபவைதான்" என்றார்.