ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காக கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக போன்றவை களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேபோல், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணிக் கட்சிகளான தமாகா, பாஜகவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தேமுதிக கட்சிசியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “திமுக, அதிமுக என இரு கட்சிகளும் ஊழல் செய்துள்ளது. திமுக அரசு நூல் விலையை கட்டுப்படுத்தவில்லை. டாஸ்மாக் கடைகளை அகற்றவில்லை. பால்விலை, சொத்துவரி, மின்கட்டணம் உயர்ந்து வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பொதுமக்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் 21 அமைச்சர்கள் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர்.
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். அது உங்களுடைய பணம். லஞ்சம், ஊழல் செய்து கோடிக் கோடியாக கொள்ளை அடித்த பணம். இன்று தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுக்கிறார்களே அதை வாங்கிக் கொள்ளுங்கள். மூக்குத்தி, கம்மல், கால் கொலுசு என்ன? எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். செயின் கொடு, வளையல் கொடு என பெண்கள் கேளுங்கள். இன்று தங்கம் விலை எங்கோ ஏறிவிட்டது. வந்த உடன் தங்க நகை கடன் தள்ளுபடி என சொன்னார்களே. செய்தார்களா. இருக்க இருக்க தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. தாலிக்குத் தங்கம் என சொன்ன திட்டத்தையும் முடக்கிவிட்டார்கள். அதுமட்டுமில்லை. அனைத்து நல்லத் திட்டங்களையும் நிறுத்தி மக்களை வஞ்சிக்கக் கூடிய ஆட்சி நடக்கிறது.
ஈரோடு கிழக்கில் தேமுதிக வெற்றி பெற்றால் விஜய்காந்த்திற்கு தைரியம் வரும். என் மக்கள் என்னை கைவிடவில்லை. என் மக்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள் என்ற தெம்பும் தைரியமும் விஜய்காந்த்திற்கு வந்து அதை அவர் உணர்ந்தால் பழையபடி விஜய்காந்த்தை நீங்கள் பார்ப்பீர்கள்” எனக் கூறினார்.