அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் வசதிக்காக வைக்கப்பட்டிருந்த உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் இறையூர் அய்யனார் கோவிலில் ஒரு பிரிவினருக்கு அனுமதி மறுப்பு, இரட்டைக்குவளை முறை என பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவங்கள் தொடர்பாக தற்போது சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வேங்கைவயல் கிராமத்திற்குச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இதுவரை அரசு இதைப் பற்றி பேசவில்லை. கேட்டால் அவர்கள் சொல்கின்ற காரணம் குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்ற மக்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டால் அவர்களுக்கு பாதுகாப்புக்கு யார் இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். ஒரு அரசே இப்படி சொல்லலாமா? இதைத்தான் பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பிலும் நீங்கள் சொன்னீர்கள். குறைந்த எண்ணிக்கையில் உள்ள மக்களிடம் நீங்கள் வரி வாங்குவது இல்லையா? வாக்கு கேட்பதில்லையா? நாங்கள் இந்த நாட்டின் மக்களா இல்லையா? நாட்டு மக்களுக்கு சட்டம் என்பது சமமாகத் தானே இருக்க வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு எந்த பாதுகாப்பும் கொடுக்க முடியாது அதே பெரும்பான்மையாக உள்ள மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என்றால் அவன் அந்த திமிரில் தானே இது போன்ற தவறுகளை தொடர்ச்சியாக செய்கிறான்.
அரசே வரவில்லை; சட்டமே வரவில்லை; நாடே வரவில்லை என்றால் யார் வருவார். நீங்கள் வந்தாலும் வராவிட்டாலும் நான் வருவேன். எதனால் இவ்வளவு காலதாமதம் ஆகிறது. எல்லா விஷயத்திலும் இப்படித்தான் செய்கிறீர்கள். ஸ்ரீமதி விஷயத்திலும் இப்படித்தான் செய்தீர்கள். விசாரிக்கிறோம்; சிபிசிஐடிக்கு மாற்றுகிறோம் என்கிறீர்கள். சிபிசிஐடிக்கு மாற்றுகிறோம் என்றாலே ஏமாற்றுகிறோம் என்பது எங்களுக்கு தெரிகிறது. இந்த தவறை செய்தது யார் என்று கண்டுபிடிப்பதற்கு உலகம் முழுக்க விசாரணை செய்யப் போகிறீர்களா? இந்த சின்ன ஊர்தானே. இதில் இந்த தவறை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்க முடியாதா என்ன? இதில் அரசினுடைய கையாலாகாத தனம் வெளிப்படையாக தெரிகிறது.
தங்கச்சி ஸ்ரீமதி வழக்கில் என்ன செய்தீர்கள்? அவர் இறந்துவிட்டார் என்று தெரிந்துவிட்டது. இரண்டு நீதிபதிகளை விசாரணைக்கு போட்டீர்கள். சிபிசிஐடி விசாரணை என்றீர்கள். அதற்குள் நீதிமன்றத்தில் வழக்கு வந்து விட்டது. நீதிபதி தற்கொலை என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அந்த மாதிரி சிபிசிஐடிக்கு ஏன் மாற்ற வேண்டும். சிபிசிஐடி முதல்வரின் கீழேதான் உள்ளது. காவல்துறை, உளவுத்துறை முதல்வருக்கு கீழேதான் உள்ளது. அப்பொழுது காவல்துறை, உளவுத்துறை பலவீனமாக இருக்கிறது. சிபிசிஐடி சரியாக இருக்கிறதா? இன்னும் எவ்வளவு நாள் விசாரிப்பீர்கள். காலம் கடத்தி இந்த பிரச்சனையை ஆறப்போட்டு மக்களுக்கு வேற பிரச்சனை வரும் பொழுது முடித்துவிட்டு விடுவீர்கள். டாஸ்மாக் சரக்கில் கலப்படம் என்று ஒரு புகார் வந்தால் எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுப்பீர்கள். இந்த சம்பவத்தில் இவ்வளவு மெத்தனம் காட்டும் நீங்கள் அப்படி ஒன்று நிகழ்ந்தால் எப்படி விரைவாக நடவடிக்கை எடுப்பீர்கள். இது அரசின் கையாலாகாத தனம்'' என்றார்.