தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்துவதை சமீபகாலமாக மத்திய பாஜக அரசு ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறது.
இரண்டு நாட்களாக திமுகவின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எ.வ.வேலுவின் அலுவலகம் மற்றும் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியது வருமான வரித்துறை. இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வருமான வரித்துறைக்கு எதிராக தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளார் திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன்.
அந்தப் புகாரில், “திமுகவின் வெற்றியை தடுப்பதற்காக வருமான வரித்துறையினர் ரெய்டுகளை நடத்துகிறார்கள். தேர்தல் அதிகாரிகள் யாரும் எந்தப் புகாரும் தெரிவிக்காத நிலையில், ரெய்டுகள் ஏவிவிடப்படுகின்றன. திமுகவை களங்கப்படுத்தும் முயற்சி. ரெய்டுகள் மூலம் திமுகவின் பிரச்சாரத்தை தடுக்க நினைக்கின்றனர்.
இதனை தலைமை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தால், ஜனநாயகத்தின் வலிமை குறைந்துவிடும். உள்நோக்கத்துடன் நடத்தப்படும் ரெய்டுகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் வருமான வரித்துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று திமுக சார்பில் கொடுக்கப்பட்ட புகாரில் தெரிவித்திருக்கிறார் டி.கே.எஸ். இளங்கோவன்.