கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளதால் அங்குத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் 224 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து கர்நாடக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும் இருக்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று கர்நாடகாவில் உள்ள ஹோஸ்பெட் என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "ஹனுமனின் இந்த புண்ணிய பூமியை வணங்கி மரியாதை செய்வது எனது பெரும் பாக்கியம். அதே நேரத்தில் முன்பு ஸ்ரீராமர் பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தற்போது பஜ்ரங் பாலி தளத்தைப் பூட்ட முடிவு செய்துள்ளது. மேலும் ஜெய் பஜ்ரங் பாலி என்று கோஷமிடுபவர்களைப் பூட்டி வைக்க முடிவு செய்துள்ளனர்." என்று பேசி உள்ளார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு கர்நாடக மாநில அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.