தமிழ்நாட்டிலேயே மிகவும் பரபரப்பான தொகுதியாக உள்ளது அதிமுக வேட்பாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி. பெரும் பரபரப்புக்களுடன் பரப்புரைகள் சென்று கொண்டிருக்கிறது.
தேர்தல் தேதி அறிவித்த உடனேயே விராலிமலை தொகுதி வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் கொடுக்க அமைச்சரின் கல்லூரியில் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கடந்த மாதம் திமுக மா.செ (பொ) செல்லப்பாண்டியன் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுத்தார். ஆனால், அந்த புகார் கண்டுகொள்ளப்படவில்லை என அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் அதிமுக கரையுடன் கூடிய சேலைகள், மளிகை பொருட்கள், எந்தெந்த கிராமங்களுக்கு யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற விபரங்கள் ரூட் மேப்புடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் எழுதிய டைரியும் சிக்கியது. பிறகு அமைச்சரின் சகோதரர் உதயகுமாரின் உதவியாளரும் சுகாதார ஆய்வாளருமான விராலிமலை வீரபாண்டியன் வீட்டில் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை வருமானவரித்துறை கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் திமுக மா.செ. செல்லப்பாண்டியன், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், கடந்த மாதம் நாங்கள் கொடுத்த புகாருக்கு நீங்கள் நடவடிக்கை எடுக்காததால் தற்போது வேட்டி, சேலை பரிசுப் பொருட்கள் வழங்கி வருகிறார். அதில் சில பொருட்களை தேர்தல் பறக்கும் படையினரே கைப்பற்றி உள்ளனர். அதனால் சோதனைகள் செய்ய வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.
23ஆம் தேதி கொடுத்த புகாருக்கு 27ஆம் தேதி மாலை அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார் நடத்தும் இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தண்டாயுதபாணி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு பொங்கல் சீர் கொடுத்துவிட்டு எஞ்சி இருந்த 650 வெண்கல பொங்கல் பானைகள் இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் இன்று நத்தம்பண்ணை ஊராட்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் படம் போடப்பட்ட பரிசுப் பொருட்கள், வேட்டி, சேலைகள் கட்டுக்கட்டாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக புகார் வந்ததையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து ஊராட்சியிலேயே வைத்து பூட்டி சீல் வைத்தனர். இந்தப் பொருட்கள் தேர்தலுக்கு முன்பு நிவாரணம் கொடுக்க வந்த பொருட்கள் என்றும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ஊராட்சியிலேயே வைக்கப்பட்டுள்ளது என்றும் ஊராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இப்படி அடுத்தடுத்து பணம், பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்படுவதால் தேர்தலை நிறுத்தி வைக்கும் திட்டம் இருக்கிறதோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. மேலும் விராலிமலை தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.