திருவண்ணாமலையில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், அண்ணன் துரைமுருகன் பேசுகின்ற போது குறிப்பிட்டிருந்தார். நேற்று முன் தினம் மத்தியில் உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித்ஷா ஒரு அபாய அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார். இந்தி பேசாத மக்கள் மனதில் தேள்கொட்டியது போல் அந்த செய்தி வந்திருக்கின்றது. நன்றாக கவனிக்க வேண்டும், அமித் ஷா அவர்களுக்கும் மோடி அவர்களுக்கும் தாய்மொழி இந்தி அல்ல, பிறகு எதற்காக இந்தி மொழிக்கு அவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள். அமித்ஷா என்ன சொல்கிறார்? நாடு முழுமைக்கும் ஒரு மொழி அவசியம் அதுதான் இந்தியாவின் அடையாளத்தை தரும். அதிக மக்களால் பேசப்படக்கூடிய இந்தி மொழிதான் அந்த அடையாளத்திற்குரிய மொழி என்று அமித் ஷா அவர்கள் நேற்றைக்கு ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
நான் சொல்கிறேன், இந்தியாவில் இந்தி மொழி பேசுபவர்கள் மட்டும் வாழவில்லை, இந்தியாவில் கணக்கெடுத்து பார்த்தீர்கள் என்றால் 1,652 மொழிகள் பேசக்கூடிய மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்று இந்திக்கு மட்டும் மகுடம் சூட்டுவது, இந்தியா முழுமைக்கும் இந்தியை திணிக்கத்தான்.
இன்றைக்கு இந்தியைத் திணிக்க சட்டம் போடுவார்கள், நாளைக்கு தமிழை படிக்கக்கூடாது என்று சட்டம் போட்டக்கூடிய சூழ்நிலை கூட வரும். அதனால், தான் தந்தை பெரியார் அவர்கள் இந்தியை எதிர்க்கின்ற நேரத்தில் சொன்னார்கள். “இது கலாச்சார படையெடுப்பு, இந்தி பேசுபவர்கள் நாகரீகம் என்பது வேறு, நம்முடைய நாகரீகம் என்பது வேறு”. இந்த கலாச்சார படையெடுப்பிற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்க வேண்டும்.
நாளை மாலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் கூடவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்க இருக்கிறோம். என்னதான் நாளை மாலை கூடுகின்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்படவிருந்தாலும், நான் முன்கூட்டியே வெளிப்படையாக தெரிவிக்க விரும்புகின்றேன்.
இந்தியை திணிக்கிற எந்த முயற்சியையும் தி.மு.க பார்த்துக் கொண்டிருக்காது. அதனை, தடுக்கின்ற முயற்சியில்தான் உறுதியாக ஈடுபடும். அதற்காக எந்தத் தியாகத்திற்கும் நாங்கள் செல்வதற்கு தயாராக இருக்கிறோம். எனவே, அந்த தியாகத்தை செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்ற உறுதியை, இந்த முப்பெரும் விழா நடைபெறக்கூடிய திருவண்ணாமலையில் நான் அறிவிக்க விரும்புகிறேன்.
இந்தி போராட்டம் என்பது தமிழகத்தோடு முடிந்துவிடாது இந்தி பேசாத மாநில மக்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் போரட்டமாக அது நிச்சயம் அமையும்.
இந்தியாவா – ‘இந்தி’-யா?வா எது வேண்டும் என்று சொன்னால், எங்களைப் பொறுத்தவரைக்கும் இந்தியா தான் வேண்டும் என்று சொல்பவர்கள் நாங்கள். ஆனால், இந்தி தான் வேண்டும் என்று சொல்பவர்கள் அவர்கள்.
இது அரசியல் போராட்டமல்ல, இது ஒரு பண்பாட்டுப் போராட்டம், மொழிப்போராட்டம், அரசியல் எல்லைகளை எல்லாம் கடந்து தமிழ் அறிஞர்கள் மாணவர்கள் அனைவரும், நாம் ஈடுபடுகின்ற இந்த போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் ஆன்மீக எண்ணம் கொண்டிருக்கக்கூடியவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். 1938-ல் இந்தி திணிப்பு எதிர்ப்புபோராட்டத்தை துவங்கினார்கள். அந்த ஒற்றுமை 2019-ல் வரவேண்டும்.
அந்த மொழிப்போராட்டத்தை நடத்துவதற்கு நாம் தயாராக இருந்தாக வேண்டும்.
வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற உறுதியோடு தயாராவோம் தயாராவோம் என்பதை எடுத்துச்சொல்லி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்! இவ்வாறு அவர் பேசினார்.