தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துதல் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டுகளை நடத்துகின்ற கூட்டமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஏற்கனவே இந்த வழக்கில் விசாரணை நடந்து வந்த நிலையில், இரண்டாவது நாளாக நேற்று விசாரணை நடைபெற்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
அப்பொழுது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், 'சிலர் ஆன்லைன் விளையாட்டுகளில் மரணம் அடைகிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த விளையாட்டுகளைக் குறை கூற முடியாது. அதேபோல் திறமைக்கான விளையாட்டை அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டு எனக் கொண்டுவர முடியாது' என்ற வாதங்களை முன் வைத்தார். மத்திய அரசு தரப்பில் வாதங்களை முன் வைக்கும் போது, 'ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வந்திருக்கிறது. மத்திய அரசு சட்டப்படி ஆன்லைன் சூதாட்டம் தடுக்கப்படும். ஆனால், ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வதற்குத் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை' என்ற வாதத்தை வைத்தது. இதில் தமிழக அரசின் பதில் வாதத்திற்காக வழக்கானது ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், ''ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 44 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனத் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கொடுத்துள்ள அறிக்கையிலும் தெளிவாக இது சொல்லப்பட்டிருக்கிறது. மக்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களின் வழக்கறிஞர் சொல்கிறார் விளையாட்டை நடத்துகின்றவர்களுடைய கருத்துகள் கேட்கப்படவில்லை என்று. அந்த விளையாட்டை நடத்துகின்றவர்கள் கருத்துக்களையும் நாங்கள் கேட்டிருக்கிறோம்.
அனைவருக்கும் சந்தர்ப்பம் கொடுத்து கருத்து கேட்ட பிறகு தான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு ஐடி ஆக்ட் ரூல்ஸ் கொடுத்திருக்கிறார்களே தவிர சட்டமாக எதையும் நமக்கு தரவில்லை. இதற்கென்று தனியாக ஒரு சட்டம் தரவில்லை. ஆன்லைன் விளையாட்டை நடத்துவதால் அதிலிருந்து ஜிஎஸ்டி மூலமாகப் பணம் வரும் என்றுதான் மத்திய அரசு பார்க்கிறார்கள். உலக சுகாதார அமைப்பு ஆன்லைன் விளையாட்டுகளை எல்லாம் ஒரு கொடிய நோய் என்று சொல்லிவிட்டது. அந்த கொடிய நோயை கட்டுப்படுத்துவது ஒரு அரசாங்கத்தினுடைய கடமை. ஆனால் அந்த கொடிய நோயை கட்டுப்படுத்தாமல் பரப்புவதற்கு துணையாக இருந்தால் அது எப்படி ஒரு நல்ல அரசாக இருக்க முடியும். கரோனாவை விட இது கொடிய நோயாகப் போய்விடும்'' என்றார்.