
“மாநில அரசிடமே அந்த கோப்புகளை கொடுக்கின்றேன். ஆனால் உங்களிடம் கொடுத்த பிறகு அதைப் பொதுவெளியில் வெளியிடுவோம். அப்பொழுது தலைகள் உருள வேண்டும்” எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவை பந்தை பொறுத்தவரை உயர்நீதிமன்றத்தில் தனி நபர் நேற்று காலையில் வழக்குப் போட்டு உடனடியாக நீதிபதி முன்பு அவசர வழக்காக வந்தது. மாநிலத் துணைத் தலைவர் பால் கனகராஜ் என் சார்பில் அதில் பேசியுள்ளார். அதில் மிகத்தெளிவாக வழக்கறிஞர் சொல்லியுள்ளார், “கோவை மக்களின் மனநிலையைப் பிரதிபலித்து பல இயக்கங்களுடன் சேர்ந்து வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளனர். அப்படி இருக்கும் போது அண்ணாமலை என்ற பெயரை இந்த வழக்கில் சேர்ப்பது தவறு.
மாநிலத்தலைவராக பந்திற்கு அண்ணாமலை அழைக்கவில்லை. அப்படி இருக்கும் போது இந்த மனுவை நீங்கள் அனுமதிக்கக் கூடாது என வழக்கறிஞர் கூறியதை நீதிபதி ஏற்றுக்கொண்டு இதனை ஒன்றாம் தேதி தள்ளி வைத்துள்ளார். சென்னையில் அமர்ந்து கொண்டு மாநிலத்தலைமை நிர்பந்திக்கப்போவது கிடையாது. அது கோவை மாவட்ட பாஜகவின் உணர்வு.
முதலில் என்னை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் என சில அமைச்சர்கள் கூறியதைப் பார்த்தேன். முதலில் என்னை அவர்கள் விசாரித்தால் என்னிடம் இருக்கும் கோப்புகளை அவர்களிடம் கொடுப்பேன். அது எப்படி எனக்கு வந்தது என்றும் கூறுவேன். யார் அனுப்பினார்கள் என்றும் சொல்லுவேன். இதில் பல உயர் அதிகாரிகளின் பதவி போவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த கோப்புகளை வெளிவிட்டால் மிகப் பெரிய பூதம் வெடித்துவிடும். சும்மா எதுவும் பேசவில்லை. மாநில அரசிடமே அந்த கோப்புகளைக் கொடுக்கின்றேன். ஆனால் உங்களிடம் கொடுத்த பிறகு அதைப் பொதுவெளியில் வெளியிடுவோம். அப்பொழுது தலைகள் உருள வேண்டும்.
நான் தவறே செய்யாத போது பத்திரிக்கையாளர்களிடம் நான் ஏன் வருத்தம் கேட்க வேண்டும். இத்தனைப் பத்திரிக்கையாளர்கள் பல இடங்களில் என்னைப் பார்க்கிறீர்கள். யாரவது ஒருவர் கை உயர்த்தி சொல்லுங்கள். நான் உங்களை மரியாதையாக நடத்தவில்லை என்று. நீங்கள் எப்பொழுது அழைத்தாலும் போனை எடுத்து, கட்சி சார்பாக என்ன கேள்வியைக் கேட்டாலும் பதில் சொல்லுகிறேன். அப்படி இருக்கும் போது பிறர் சொல்லுவதை நீங்களும் நம்ப வேண்டாம். நானும் நம்பக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறேன்" எனக் கூறினார்.