'மேகதாது அணை கட்டுவதாக அவர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சீரியஸ் ஆகுமானால் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும்' எனத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “சர்வே பண்ணுவதிலேயே மேகதாது அணையை கட்டிவிட முடியாது. எந்த ஒரு அணையைக் கட்டுவதாக இருந்தாலும் டிபிஆர் தயார் செய்ய வேண்டும். அந்த டிபிஆர்-ஐ சென்ட்ரல் வாட்டர் கமிஷன் ஒத்துக்கணும். அவர்கள் ஒத்துக் கொள்வதை பொல்யூஷன் போர்டு ஒத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் ஒத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு காவேரி வாட்டர் மேனேஜ்மென்ட் அத்தாரிட்டி ஒத்துக்க வேண்டும். எவ்வளவு வேலைகள் இருக்கிறது. ஆகையால் அணை கட்டும் வேலையெல்லாம் நடக்காது. இந்த ஸ்கூல் பசங்களுக்கு புது புக் வாங்கி கொடுத்தீங்கன்னா அதை ஆர்வத்துடன் திறந்து பார்ப்பார்கள். அது போன்ற வேகத்தில் இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பரபரப்பான செய்தியே தவிர இதனாலேயே அணைக்கட்டி விட முடியாது. அதற்காக ஏனோதானோ என்று இருக்கமாட்டேன். அவர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சீரியஸ் ஆகுமானால் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர்கள், '11-ம் தேதி நடைபெற இருக்கும் காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வீர்களா?' என்ற கேள்விக்கு, “கண்டிப்பாக சொல்வேன். என்னுடைய தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக பஞ்சாயத்து தோறும் பணிகள் எப்படி நடந்திருக்கிறது. எந்தெந்த பணிகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது என்பதை எல்லாம் ஓர் ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையின் காரணமாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அதிகாரிகளோடு பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பஞ்சாயத்தாக ஒரு ஆய்வு நடத்தினோம். இதில் சில பணிகள் தொய்வில் இருக்கிறது. அவற்றை விரைவில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறோம். சில பஞ்சாயத்துகளுக்கு தேவையான முக்கியமான சில திட்டங்களை சொல்லியிருக்கிறார்கள். அந்த திட்டங்களை எல்லாம் அடுத்து வரும் ஆண்டில் செய்ய இருக்கிறோம்'' என்றார்.