
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த புதிய பாலம் இன்று (06.04.2025) பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமேஸ்வரம் பாம்பன் ரயில் புதிய பாலத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ் மண்ணில் நின்று கொண்டு, பிரதமர் தெளிவான உத்தரவாதம் அளிக்க வேண்டும்: "மக்கள்தொகை வளர்ச்சியை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் வரவிருக்கும் எல்லை நிர்ணய நடவடிக்கையில் தண்டிக்கப்படாது. சதவீத அடிப்படையில் அவர்களின் நாடாளுமன்ற இடங்களின் பங்கு அப்படியே இருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி, இந்த வாக்குறுதியை பகிரங்கமாக வழங்க வேண்டும். தமிழக மக்களின் மனதில் உள்ள அச்சங்களைப் போக்க வேண்டும், அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வர வேண்டும். நியாயமான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி இதுதான். அவர் செயல்படுவார் என்று நான் மனதார நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.