Skip to main content

சி.பி.எம் அகில இந்திய பொதுச்செயலாளராக மரியம் அலெக்சாண்டர் பேபி தேர்வு; முதல்வர் வாழ்த்து

Published on 06/04/2025 | Edited on 06/04/2025

 

Mariam Alexander Baby elected as CPM All India General Secretary

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டு, மதுரையில் ஏப்ரல் 2-ஆம் தொடங்கி 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. இம்மாநாட்டின் கடைசி நாளான ஏப் 6-ந்தேதி கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராகக் கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.ஏ.பேபி (71) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-வது மாநாடு மதுரையில் ஏப்ரல் 2-ந் தேதி தொடங்கி 6-ந்தேதி வரை நடைபெற்றது.  இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள், மத்தியக் குழு உறுப்பினர்கள், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்,  கேரளா முதல்வர் பினராயி விஜயன்,  நடிகர்கள் பிரகாஷ்ராஜ்,  சமுத்திரக்கனி, இயக்குநர்கள் ராஜூமுருகன், மாரி செல்வராஜ், ஞானவேல், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்று மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

இந்நிலையில் மாநாட்டின் இறுதி நாளான இன்று(6.4.2024) கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக மரியம் அலெக்சாண்டர்பேபி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களாக பினராயி விஜயன், பி.வி.ராகவுலு, எம்.ஏ.பேபி, தபன் சென், நிலோத்பால் பாசு, எம்.டி.சலீம், விஜயராகவன், அசோக் தவாலே, ராமச்சந்திர டோம், எம்.வி.கோவிந்தன், அம்ரா ராம், விஜூ கிருஷ்ணன், மரியம் தவாலே, உ.வாசுகி, கே.பாலகிருஷ்ணன், ஜிதேந்திர சவுத்ரி, ஸ்ரீதீப் பட்டாச்சார்யா, அருண் குமார் ஆகிய 18 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்மாநாட்டில், 29 புதிய முகங்கள் உட்பட 84 பேர் மத்தியக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம், என்.குணசேகரன், கே.பாலபாரதி ஆகியோர் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு அழைப்பாளராக மாணிக் சர்க்கார், பிரகாஷ் காரத், பிருந்தா காரத், சுபாஷினி அலி, எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, பிமன் பாசு, ஹன்னன் மொல்லா  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர்களாக ஜி.ராமகிருஷ்ணன், எம்.விஜயகுமார்,  யு.பசவராஜு, ராபின் டெப்,  ஜோகேந்திர சர்மா, ரமா தாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநாட்டின் இறுதி நாளில் செந்தொண்டர் பேரணி தமிழகம் மற்றும் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்து வந்த கட்சியினர் பொதுமக்கள் என பல லட்சம் பேர் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

எம்.ஏ. பேபி யார்?

கேரளா கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த பேபி பள்ளி பருவத்தில் இந்திய மாணவர் சங்கம் வாலிபர் சங்கத்தில் சிறப்பாக பணியாற்றி கட்சியின் பதவிக்கு வந்தவர். இவர் மாநில வளர்ச்சிக்கு  பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். கேரள மாநில கல்வி அமைச்சராகவும், எம்.பி-யாகவும் பணியாற்றியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் காலமானார். பொதுச்செயலாளர் பதவி காலிய இருந்தது. பின்னர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் பொதுச்செயலாளராக பணியாற்றிய பிரகாஷ்கரத் பணியாற்றி வந்த நிலையில் 24-வது அகில இந்திய மாநாட்டில்  புதிய பொதுச் செயலாளராக பேபி என்கிற மரியம் அலெக்சாண்டர்பேபி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இவருக்கு கட்சியினர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எம்.ஏ.பேபிக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “தமிழக முதல்வர் சிபிஐ(எம்) பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள தோழர் எம்.ஏ. பேபிக்கு வாழ்த்துக்கள். மாணவர் தலைவராக அவசரநிலையை எதிர்கொண்டதிலிருந்து, முற்போக்கான தொலைநோக்குப் பார்வையுடன் கேரளாவின் கல்விக் கொள்கையை வடிவமைப்பது வரை, அவரது பயணம் மிக நீண்டது. மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சியை உறுதிப்படுத்துவதில் திமுக உங்களுடன் இணைந்து செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்