
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த புதிய பாலம் இன்று (06.04.2025) பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இலங்கையில் சுற்றுப்பயணத்தில் இருந்த பிரதமர் மோடி, ராமேஸ்வரம் மண்டபம் கேம்ப் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார். தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மோடியை வரவேற்றார். பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி, எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் மோடியை வரவேற்றனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்று பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அங்கிருந்து பேருந்து நிலையம் அருகே ஆலயம் பகுதியில் ரயில்வே துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் 8,300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்திற்கான பல்வேறு நெடுஞ்சாலை துறை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு முடிவடைந்த பணிகளை நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தார்.
கூட்டத்தில் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உரையாற்றிய நிலையில் பிரதமர் மோடி தலைமை உரையாற்றினார். 'வணக்கம்' எனக் கூறி வழக்கம்போல தமிழில் உரையை தொடங்கிய பிரதமர், ''என்அன்பு தமிழ் சொந்தங்களே. இன்று ராம நவமி இது ஒரு பவித்திரமான நாள். சற்று நேரம் முன்பு தான் அயோத்திய ராமர் கோவிலில் ராமரின் நெற்றியில் சூரிய கதிர்கள் தெரிந்தன. ராமேஸ்வரம் என்ற இந்த புண்ணிய பூமியிலிருந்து இந்திய மக்கள் அனைவருக்கும் ராம நவமி தின வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.

ராமேஸ்வரம் பாரத ரத்னா அப்துல் கலாம் பிறந்த பூமியாகும். ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றோடு ஒன்று இணைந்தது என்பதற்கு அப்துல் கலாம் வாழ்க்கை ஒரு உதாரணம். தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் சுவாமி கோவிலில் தரிசனம் செய்ததை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன். பல லட்சக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கையில் இந்த பாலம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். புதிய பாம்பன் பாலம் தொழில்நுட்பம் பாரம்பரியத்தை உள்ளடக்கியது. ராமேஸ்வரம் தொடங்கி சென்னை வரையும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடையிலான இணைப்பினை இந்த புதிய ரயில் சேவை மேம்படுத்தும். தமிழ்நாட்டின் சுற்றுலா மற்றும் வணிகத்திற்கு இது ஆதாயங்களை கொடுக்கும். இளைஞர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் சந்தர்ப்பங்களை இது ஏற்படுத்தித் தரும்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் இருமடங்காக உயர்ந்துள்ளது. நாட்டின் துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்புகளே காரணம். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு ரயில்வே திட்டங்களுக்கு 900 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே திட்டங்களுக்கான நிதி 6000 கோடியாக ஒதுக்கப்பட்டு ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நான்காயிரம் கிலோ மீட்டருக்கு சாலைகள் போடப்பட்டுள்ளது.
சுமார் 8000 கோடியிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. மலிவு விலை மருந்தகங்கள் மூலம் பொதுமக்களுக்கு 700 கோடி லாபம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மாநில மொழியில் மருத்துவ பாடங்கள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் மருத்துவ படிப்புகளை தொடங்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். தமிழ் மொழியின் பாரம்பரியம் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றடைந்துள்ளது. ஆனால் தமிழகத்திலிருந்து தமக்கு கடிதம் எழுதுபவர்களின் கையெழுத்து ஆங்கிலத்திலேயே உள்ளது. எனக்கு கடிதம் எழுதும் அரசியல் தலைவர்கள் குறைந்தபட்சம் கையெழுத்தையாவது தமிழில் போடுங்கள்'' என்றார்.