
இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி என ஒன்றிய அரசை கண்டித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க.இளைஞர் அணி சார்பில் திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனி உழவர் சந்தை அருகே மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில் குமார். தலைமை கழக பேச்சாளர் மதுரை பாலா. இளம் பேச்சாளர் சுகாசினி, மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா உள்பட காட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பினார்கள். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டார்.
அதன்பின்பு கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்த மாநிலத்தில் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. இதனை நான் சொல்லவில்லை. அகில இந்தியாவே போற்றிக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிருக்கிறார் என மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் பார்த்து காப்பி அடித்து பின்பற்றக்கூடிய நிலை உள்ளது. ஆனால் மோடிக்கு மட்டும் இது தெரியவில்லை. மறைந்த முதல்வர் கலைஞர் தமிழகத்திற்கு ஐந்து முழக்கங்களை தந்து விட்டுச் சென்றிருக்கிறார். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி, வன்முறையைத் தவிர்த்து வறுமையை வெல்வோம் எனச் சொல்லி விட்டு சென்றிருக்கின்றார்.
தமிழ்நாட்டில் மத்திய அரசு இந்திய திணிக்க வேண்டும் என்று நினைத்தால் அது ஒரு பொழுதும் நடக்காது. தமிழகத்தைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை தான். தமிழ்நாட்டில் இந்திக்கு என்றும் இடமில்லை. இந்தியை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம். மும்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் உள்ளதா? மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் உங்களுக்கு நிதி கொடுப்போம் என்று அரசியல் சட்டத்தில் உள்ளதா? மதத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த நினைக்கிறீர்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு, இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என மும்மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இதன் அடிப்படையில் தான் அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்துக்களுக்கு என்ற ஒரு சட்டம் உள்ளது, இஸ்லாமியர்களுக்கு என்று ஒரு சட்டம் உள்ளது, ஆனால் இந்த சட்டத்தை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைக்க வேண்டும், சர்வாதிகாரத்தை கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்கிறார்கள். இதற்கு காரணம் ஒரே நாடு ஒரேமொழி என்ற கொள்கையை பின்பற்றுவதற்காக தான். தமிழகத்தை பின்பற்றித் தான் ஒவ்வொரு மாநிலமும் திட்டங்களை அறிவித்து வருகின்றனர். மகளிர் உரிமை திட்டம், மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் போன்றவற்றை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்தியா வரலாற்றிலேயே முதல்முறையாக 24 லட்சம் பேருக்கு திமுக ஆட்சியின் போது முதியோர் உதவித்தொகை வழங்கிய ஒரே முதலமைச்சர் கலைஞர் தான். அதிமுக ஆட்சியில் ஒரு முதியவர் இறந்தால் தான் அவருக்கு பதிலாக வேறொரு முதியவருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்படும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் தற்போது மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தகுதி உள்ள அனைவருக்கும் முதியோர் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மக்களுக்காக பணி செய்யக்கூடிய ஒரே கழகம் திராவிட முன்னேற்றக் கழகம் தான். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சமமாக தமிழகத்தில் எந்த இயக்கமும் உருவாக முடியாது. எத்தனை பேர் சேர்ந்தாலும் குன்னக்காவடி எடுத்தாலும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர யாருக்கும் தகுதி இல்லை. தமிழகத்தில் விடுபட்டு போன தகுதி உள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறிக்க முயற்சி செய்கிறது. இதனை எதிர்த்துப் போராடக் கூடிய முதலமைச்சர் இந்தியாவிலேயே தமிழக முதல்வர் மட்டும்தான் உரிமைகளுக்காக போராடி வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின் நிதி உரிமைக்காக போராடி வருகிறார். மாநில அரசின் உரிமை பெறுவதற்காக தொடர்ந்து போராடி வருகிறார். ஆகையால் மு.க.ஸ்டாலின் பின்னாடி தான் தமிழக மக்கள் நிற்பார்கள். அவர்களுடைய ஆட்சி காலத்தில் மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் மோடிக்கு பின்னால் கேடி மாதிரி வருவார்கள். அவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும். மீனவர்களின் உரிமையை காப்பதற்காக மீனவர் பாதுகாப்பதற்காக கச்சத்தீவை மீட்பதற்காக நீதிமன்றம் செல்வோம் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகள் 12,500 இருக்கிறது. இதில் உள்ள தலைவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் கொடுக்கும் நிதியை பகிர்ந்து கொடுத்ததின் பேரில் சுதந்திரமாக செயல்பட்டார்கள். அந்த அளவுக்கு உள்ளாட்சி தலைவர்களை சுதந்திரமாக செயல்பட வைத்த ஒரே தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் தான்” என்று கூறினார்.
இக்கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் நாகராஜ், பிலால், பொருளாளர் சத்தியமூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை, பொதுக்குழு உறுப்பினர் அக்பர், இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இலா. கண்ணன்,
திண்டுக்கல் மாநகர பகுதி செயலாளர்களான ராஜேந்திரகுமார், ஜானகிராமன், அங்கு, சந்திரசேகர், மற்றும் திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஷ், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், துணை அமைப்பாளர் திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் வெங்கடேஷ், உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.