நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.
அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் புதுவை அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வாக்கிற்கு ரூ. 500, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் ரூ. 200 கொடுத்துள்ளனர். இதன் மூலம் மக்களை கொச்சைப்படுத்தும் தேர்தலாக மீண்டும் மாற்றி விட்டனர். இந்த தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டிய தேர்தல். இந்த தேர்தல் அடுத்து வரும் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வழிவிட வேண்டிய ஒரு தேர்தல் ஆகும். மீண்டும், மீண்டும் பணம் கொடுத்துதான் வெற்றி பெறுவேன். மீண்டும், மீண்டும் மக்களை ஏமாற்றிகொண்டு தான் இருப்பேன் என்று நினைக்கிறார்கள். எனவே நான் இந்த தேர்தலை புறக்கணிக்கிறேன்” என ஆவேசமாகத் தெரிவித்தார்.