தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் நேற்று சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி, இந்திய மக்களின் ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுகிறேன் என்று சொன்னதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அதைத் தான் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். ஆனால், பா.ஜ.க தலைவர்களோ, உதயநிதி ஸ்டாலினை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறார்கள். மன்னிப்பு கேட்க வேண்டியது உதயநிதி ஸ்டாலின் இல்லை. பா.ஜ.க தலைவர்கள் தான் இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 2013 நவம்பர் 7 ஆம் தேதி அன்று மோடி பேசிய வீடியோ திரையிடப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வருவதாக 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் பிரதமர் மோடி சொன்னார். அப்படி சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார். ஆனால், பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்று ஒன்பது ஆண்டுகள் ஆகியும் கருப்பு பணத்தை அவர் மீட்கவில்லை. ஆகையால் அவரின் தவறை உணர்ந்து பொதுவெளியில் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், அவர்கள் நவீன முறையில் சாதாரண மக்களிடம் இருந்து ரூ.35 லட்சம் கோடி கொள்ளை அடித்திருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து 85 லட்சம் கோடி ரூபாயை மீட்டு வந்து இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் கொடுக்கிறேன் என்று கூறிய மோடி அரசு, இது நாள் வரை கலால் வரி மூலமாக மக்களிடம் இருந்து ரூ.35 லட்சம் கோடி ரூபாயை கொள்ளை அடித்திருக்கிறது. இப்படி, கொள்ளை அடித்து, மக்களிடம் இருந்து சுரண்டி தோல்வியடைந்து இருக்கிறது இந்த மோடி அரசு. அதனால், அவர்கள் கண்டிப்பாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அண்ணாமலை பாத யாத்திரை செல்லவில்லை. பாத யாத்திரை என்று சொல்லிக்கொண்டு அவர் சொகுசு யாத்திரை தான் நடத்துகிறார். அவர் பாத யாத்திரை தொடங்கி 3 நாள் ஆன பின்பும் வெறும் 8 கி.மீ மட்டும் தான் நடந்து சென்றிருக்கிறார். காமராஜருக்குப் பிறகு குமரி ஆனந்தன் தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் செய்தார். நடைப்பயணம் என்ன என்று குமரி ஆனந்தனிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அண்ணாமலை சினிமா பாடல் காட்சியில் வருவது போல் சொகுசு பயணம் நடத்துகிறார். அண்ணாமலை அனைவரையும் ஊழல்வாதி என்று கூறுகிறார். ஆனால், அதை சொல்வதற்கு அவருக்கு தகுதி இருக்க வேண்டும். பா.ஜ.க.வின் இந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் தலித் மக்களுக்கு மட்டுமே ஏராளமான பிரச்சனைகள் நடந்துள்ளன” என்று கூறினார்.