கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், நாளையுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால், அரசியல் கட்சியினர் தீவிரமாக தங்கள் இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பிரதமர் மோடி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கர்நாடகாவில் 26 கி.மீ. தொலைவுக்கு பேரணி நடத்துகிறார்.
இந்நிலையில், நேற்று காலை காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், கர்நாடகா மாநிலம் சித்தப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் மணிகாந்த் ரத்தோட் பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த ஆடியோவில் அவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தை அழித்துவிடுவேன் என பேசுவது போல் உள்ளது.
இந்த ஆடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள காங்கிரஸ், மணிகாந்த் ரத்தோட் மீது 40 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என அவர் மீது மீதமுள்ள வழக்குகளையும் பட்டியலிட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய பாஜக தலைவர்கள் இப்போது சதித்திட்டம் தீட்டி வருகின்றனர். சித்தாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் பதிவில் இருந்து இது தெளிவாகிறது” என தெரிவித்தார்.
இதுதொடர்பாக பதில் அளித்த கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, “இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். முழு விவகாரமும் விசாரணை செய்யப்பட்டு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மணிகாந்த் ரத்தோட் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது; “எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. காங்கிரஸ், தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளது. அதனால் தான் இப்படி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். காங்கிரஸ் மீது புகார் பதிவு செய்துள்ளேன். சமூக வலைதளங்களில் காங்கிரஸ் பரப்பும் வீடியோக்கள் தவறானவை, நான் யாரையும் மிரட்டவில்லை” என்று தெரிவித்துள்ளார்.