உதயநிதிக்கு செங்கல்லை பார்சல் அனுப்பப்போவதாகத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காக கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக போன்றவை களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேபோல், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணிக் கட்சிகளான தமாகா, பாஜகவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வீரப்பன் சத்திரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “30 அமைச்சர்கள் ஈரோட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் 27 ஆம் தேதி காணாமல் போய்விடுவார்கள். 28 ஆம் தேதி காலையில் ஈரோட்டில் இருக்கும் ஒரே நபர் தென்னரசு தான். ஒருபக்கம் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு என சொல்லுகிறோம். பெருமைப்பட்டுக் கொள்கிறோம். சந்தி சிரிக்கும் அளவிற்கு திமுக தேர்தல் களத்தை வைத்துள்ளார்கள். இந்தியா முழுவதும் உள்ளவர்கள் ஈரோடு கிழக்கு தேர்தலை உற்று நோக்குகிறார்கள். ஆனால் திமுக பட்டி போட்டு மக்களை அடைத்து வைத்துள்ளார்கள்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தமிழகத்தின் ஜனநாயகத்தை சீர்குலைக்கக் கூடிய இளைஞர்கள் அரசியல் பக்கம் வரவேண்டாம் என நினைக்கும் அளவிற்கு ஈரோடு கிழக்கில் அனைத்து விதமான அதிகார துஷ்பிரயோகத்தை திமுக அரங்கேற்றுகிறது. இதை மக்கள் மத்தியில் விட்டுவிட்டோம்.
உதயநிதி ஸ்டாலின் செங்கல் பிரச்சாரத்தை மீண்டும் எடுத்துள்ளார். 2026ல் எய்ம்ஸ் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அந்த செங்கல் பிரச்சாரத்தை நாங்களும் எடுத்துள்ளோம். 1 லட்சத்திற்கும் மேற்பட்ட செங்கல்லால் 11 மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. இந்த செங்கல்லால் தான் ஏழை மாணவர்கள் மருத்துவமனையில் படித்துக் கொண்டுள்ளார்கள். 2009 திமுக தேர்தல் வாக்குறுதியில் தர்மபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்போம் என சொல்லியுள்ளார்கள். 14 வருடம் ஆகியும் ஒரு செங்கல் கூட வைக்கவில்லை. அதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்த உடன் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த செங்கல்லை பார்சல் அனுப்பப்போகிறேன். தர்மபுரியில் சிப்காட் அமைத்த பிறகு அவர் அதை கொடுத்துவிடலாம்” எனக் கூறினார்.