நாடு இப்போது உள்ள சூழலில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தொற்று நோயால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், நாட்டு மக்களுக்கு மத்திய அரசு நேரடி நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஆனால், பிரதமர் அவர்கள் தனது உரைகளில் அறிவுரைகளை மட்டுமே கூறுகிறார். நிவாரண உதவிகள் பற்றி வாய் திறப்பதில்லை. தன் ஆளுமையை நிலை நாட்டுதல், அரசியல் பெருமையை தேடுதல் ஆகியவைத் தான் அவரது உரைகளின் நோக்கமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தற்போது பட்டினிச் சாவுகளும், கெளரவ தற்கொலைகளும் நாடெங்கிலும் உருவாகிவிடுமோ என மக்கள் அஞ்சுகின்றனர். இந்நிலையில், கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் பெரும் புள்ளிகளின் 68 ஆயிரத்து 607 கோடி ரூபாய் வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட செய்தி நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
சிறு, குறு தொழிலுக்கு கடன் பெற்றவர்கள், விவசாய இயந்திரங்களுக்கு கடன் பெற்றவர்கள், மீன்பிடி படகுகளுக்கு கடன் பட்டவர்கள், 5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக கடன் பெற்றவர்கள் என பலரும் வதைக்கப்படும் நிலையில் பெருமுதலாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளது என்ன நியாயம்? என மக்கள் கேட்கிறார்கள்.
இச்சூழலில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இன்றைய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஆங்கிலயர்கள் கட்டினார்கள் என்பதற்காக அதை மாற்றுகிறார்களா? என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, வருவாய் இழந்துள்ள 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் தேவைப்படும் நிலையில், இப்போதைக்கு 20 ஆயிரம் கோடிகளை இதற்கு ஒதுக்குவது மனிதாபிமானமற்ற நடவடிக்கையாகும்.
இந்த நிதியை மட்டுமல்ல, மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி, GST மூலம் குவிந்துள்ள வரி வருவாய் என அனைத்தையும் மக்களுக்கு நிவாரணம் வழங்கிட பயன்படுத்த வேண்டும்.
அந்த வகையில் மத்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட திட்டங்களை ஒத்தி வைத்து, மக்களுக்கு நேரடி நிவாரண உதவிகளை வழங்க முன் வரவேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.