
தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. விவாதத்தில் பேசிய அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன், "ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காவல் துறையினருக்கு நிறைவேற்றுவதாக திமுக சொன்ன வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் தற்போது கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன. மூதாட்டிகளுக்கு கூட பாதுகாப்பில்லாத சூழல் நிலவும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது" என்று குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து சில பிரச்சனைகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டினார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், " பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி. துயரமான ஆட்சிக்குத் தூத்துக்குடியே சாட்சி. அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி. திமுக ஆட்சியில் காவல்துறை மரணங்கள் அடியோடு குறைக்கப்பட்டுள்ளன”என்றார்.
அப்போது எழுந்த எடப்பாடி பழனிச்சாமி, “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவேங்கடம் கோர்ட்டில் பேசுவதை தடுக்க என்கவுண்டர் செய்யப்பட்டாரா? உண்மை குற்றவாளியை காப்பாற்ற போலி என்கவுண்டரா? ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்ற போது திருவேங்கடம் சுடப்பட்டதாக கூறப்பட்டது. போலீஸ் அழைத்துச் சென்ற அவரிடம் அரிவாள் எப்படி வந்தது? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். தமிழகத்தில் உளவுத்துறை தோல்வியடைந்து விட்டது. எதிர்க்கட்சிகளை கண்காணிக்க மட்டுமே உளவுத்துறை பயன்படுகிறது. தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திமுக அரசு திணறி வருகிறது" என்று கடுமையாக குற்றம்சாட்டினார்.