18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (04.06.2024) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இரவு 9 மணியளவிலான நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 291 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையி்ல் மக்களவைத் தேர்தலின் வெற்றியை கொண்டாடும் வகையில், பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி, அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அக்கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர். அப்போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் மூத்த தலைவர்களுக்கு வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், “இந்தப் புனித நாளில் 3வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியானது. மக்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இவ்வளவு பெரிய அளவிலான தேர்தல் பயிற்சியை நடத்திய இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் நன்றி.
இந்தியாவின் தேர்தல் செயல்முறை மற்றும் நம்பகத்தன்மை குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள். 1962 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரு அரசாங்கம் அதன் இரண்டு பதவிக் காலங்களை முடித்துவிட்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவது இதுவே முதல் முறை. ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்கப் போகிறது. கேரளாவிலும் பாஜக ஒரு இடத்தை வென்றது. கேரளாவில் உள்ள எங்கள் கட்சியினர் நிறைய தியாகங்களைச் செய்துள்ளனர்” எனத் தெரிவித்தார். பாஜக ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளை நம்பி இருக்கும் சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை (05.06.2024) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.