
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் சிக்கிய செந்தில் பாலாஜியையும், பெண்கள் குறித்தும் சைவ - வைணவ சமயம் குறித்தும் பேசி சர்ச்சையில் சிக்கிய பொன்முடியையும் அமைச்சர் பதவியில் இருந்து விடுவித்து தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். அதன்படி, செந்தில் பாலாஜி வகித்து வந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறையை, வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
அதே போல், செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறையை, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. பொன்முடி வகித்து வந்த வகித்து வந்த வனத்துறை மற்றும் காதி துறையை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பால்வளத்துறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (28-04-25) மாலை ஆளுநர் மாளிகையில் மனோ தங்கராஜ் புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சராகப் பொறுப்பேற்ற மனோ தங்கராஜுக்கு மீண்டும் பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வரை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜை அப்போது நடந்த அமைச்சரவை மாற்றத்தில் விடுவிக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில், 7 மாதங்கள் கழித்து மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைச்சர் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.