
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் சிக்கிய செந்தில் பாலாஜியையும், பெண்கள் குறித்தும் சைவ - வைணவ சமயம் குறித்தும் பேசி சர்ச்சையில் சிக்கிய பொன்முடியையும் அமைச்சர் பதவியில் இருந்து விடுவித்து தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அரசியலை மக்கள் சேவையாக நினைக்காமல், ஊழல் செய்து கொள்ளை அடிக்கும் பிழைப்பாகவே கருதும் மு.க.ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது என்றும் ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர் விடத் துவங்கிவிட்டன! 2026-ல் அதிமுகவின் நல்லாட்சி அமைவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ‘குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த பழனிசாமியின் அரசியல் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது. தோல்வியில் சாதனை படைத்துவரும் ‘தோல்வி’சாமி அ.தி.மு.க.வைப் பாதாள வீழ்ச்சிக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் பழனிசாமி ஆட்சியில் அமைச்சரவை மாற்றமே நடக்கவில்லையா? ‘தேர்தலில் தோற்றால் கூட பரவாயில்லை. அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். ஆனால், கட்சி வீழ்ந்தால் தேர்தலில் வெற்றி சாத்தியமே இல்லை’ என்ற அடிப்படக் கோட்பாடு எல்லாக் கட்சித் தலைவர்களிடம் உண்டு. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சி தோற்றாலும் பரவாயில்லை. தன் மீதும் தன் மகன் மீதும் சம்பந்தி மீதும் அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ நடவடிக்கைகள் பாய்ந்துவிடக் கூடாது எனக் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த கூட்டணிக்குச் சம்மதித்த பழனிசாமியின் அரசியல் பாதாள வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது.
தொடர் தோல்விகளைச் சந்திப்பதில் புரட்சி செய்த, தோல்விப் புரட்சியாளர்தான் பழனிசாமி. 2025 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலிலும் தோற்று, ‘11-ஆவது தோல்வி பழனிசாமி’ என்ற அவப்பெயரைத் துடைக்கத் தேர்தலில் போட்டியிடாமல் கோழை போலக் களத்தைவிட்டே ஓடியவர்தான் பழனிசாமி. தன் கைக்குக் கிடைத்த கட்சியைச் சீரழித்துச் சின்னாபின்னமாக்கி, தோல்வியில் சாதனை சரித்திரம் படைத்துவரும் ‘தோல்வி’சாமி அ.தி.மு.க.வைப் பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆரோ ஜெயலலிதாவோ, கட்சிக்காரர் தவறு செய்தால் அவரின் கட்சிப் பதவியை, அமைச்சர் பதவியைப் பறிப்பார்கள்; இல்லை கட்சியை விட்டே நீக்குவார்கள். ஆனால் எம்.எல்.ஏ பதவியைப் பறித்ததில்லை. அந்த மாபாதகத்தைச் செய்தவர் பழனிசாமி. தன் ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்தார். அந்தப் பழனிசாமி தி.மு.க அமைச்சரவையைப் பற்றிப் பேசாமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது’ எனத் தெரிவித்துள்ளார்.