அதிமுக சார்பில் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லாது எனத் தனி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பினை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த மேல் முறையீட்டு விசாரணையில் அதிமுக பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. தீர்ப்பினை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வரவேற்று கொண்டாடினர். அதே வேளையில் மேல்முறையீட்டிற்கு செல்லும் திட்டம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது தவறு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் தான் அதை நடத்தி இருக்க முடியும். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் அதிமுக கட்சி விதிகளுக்கு எதிரானவை. எனவே பொதுக்குழுவை அங்கீகரித்ததும், எடுத்த தீர்மானங்களை அங்கீகரித்ததும் ரத்து செய்யப்பட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.