Skip to main content

“எனக்கும் கடுமையான மன வேதனை..” - வானதி சீனிவாசன் 

Published on 23/10/2023 | Edited on 23/10/2023

 

"I am also deeply saddened.." - Vanathi Srinivasan

 

பா.ஜ.க. தேசிய மகளிர் அணியின் தலைவரும், தமிழ்நாடு எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்துவருகிறது. புகார் செய்தாலும், அதனை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் இருந்துவருகிறது. இதில் எல்லாம் கவனம் செலுத்தாத தமிழ்நாடு அரசு, பா.ஜ.க. தொண்டர்கள் ஏதாவது ஒரு கருத்தை சமூகவலைதளத்தில் பதிவு செய்தால் உடனடியாக வழக்கு பாய்கிறது. பிரதமர் மோடியை எவ்வளவு கீழ் தனமாக விமர்சிக்க முடியுமோ அவ்வளவு கீழ் தனமாக விமர்சித்தது தி.மு.க. ஆனால், எங்கள் தொண்டர்கள் ஒரு கருத்தை பதிவு செய்தால் சரியாக வெள்ளிக் கிழமைகளில் கைது செய்கிறார்கள். இதனை பா.ஜ.க. சார்பில் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்தார். 

 

தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம், “பா.ஜ.க.வில் இருந்து மிகுந்த மன வேதனையுடன் விலகுகிறேன் என கௌதமி தெரிவித்துவிட்டு விலகியிருக்கிறாரே” என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், “எனக்கு கௌதமி மீது அதிகப்படியான அன்பு, பாசம், மரியாதை உண்டு. அவர் எந்த அளவுக்கு கட்சியை நேசித்தார் என்பது எனக்குத் தெரியும். ஆகவே அவரது கடிதத்தை பார்த்ததும் எனக்கும் கடுமையான மன வேதனை இருக்கு. கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு, தேசிய மகளிர் அணியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என நான் அவரிடம் கேடப்போது, அவர் அதனை மறுத்துவிட்டு மாநில அளவில் நான் பணியாற்றுகிறேன் என்று தெரிவித்தார். கடந்த மாதம் கூட அவரிடம் போனில் பேசினேன். 

 

அவர் எதிலும் சோர்ந்துபோவர் கிடையாது. நல்ல தன்நம்பிக்கையும் தைரியமும் கொண்ட பெண் அவர். கடந்த 10 நாட்களுக்கு முன்பாகக் கூட ஒரு வழக்கு தொடர்பாக அவரது உதவியாளர் எனக்கு, கட்சியில் ஒரு சிலரை பாதுகாக்கின்றனர் என செய்தி அனுப்பியிருந்தார். அதற்கு நான் முழுமையான தகவல் எனக்கு தெரியவில்லை. முழுமையான தகவல் கொடுங்கள் நான் உதவி செய்கிறேன் என அவருக்கு பதில் அளித்திருந்தேன். ஆனால், அவர்கள் பதில் தரவில்லை. ஆனால், கட்சியினர் யாரும் சட்டத்திற்கு புறமாக யாரையும் பாதுகாக்க போவதில்லை. அவர் மாநிலத் தலைவரிடம் அந்தப் பிரச்சனை என்ன என்பதை முழுமையாக சொல்லியிருந்தால் எங்களுக்கு உதவி செய்ய வாய்ப்பு இருந்திருக்கும். 

 

பா.ஜ.க.வில் அவர் இருப்பதால் இந்த மாநில அரசு வழக்கை எடுக்காமல் இருக்கிறதா? ஏன் இவ்வளவு நாட்களாக புகார் பதிவு செய்யவில்லை? அவர் இன்று கட்சியைவிட்டு வந்ததும் புகார் பதிவு செய்கிறார்கள் என்றால், அவர் கட்சியைவிட்டு வந்தால் தான் புகார் பதிவு செய்யப்படும் என ஏதாவது நெருக்கடி கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து எங்களுக்கு தெரியவில்லை” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்