பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் வகையில் மார்க் 3 எனப்படும் ரிமோட் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்துகளை கேட்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
தேர்தல் நேரங்களில் மக்களின் சிரமங்களைக் குறைக்க ரிமோட் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தை நடைமுறைக்குக் கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்துகளைக் கேட்பதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 16 ல் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இது குறித்து கருத்துகளைத் தெரிவிக்க அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகி கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்திற்காக அதிமுகவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிபிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தேசிய சட்ட ஆணையம் அதிமுகவிற்கு அனுப்பிய கடிதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் என குறிப்பிட்டு அனுப்பியதும் குறிப்பிடத்தகுந்தது.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இந்த கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பவில்லை. இதை அனுப்பியது மாநில தேர்தல் ஆணையம் தான். மாநில தேர்தல் ஆணையம் அனுப்பியது என்று சொல்லும் போது அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். வீடு எங்களுடையது என நாங்கள் சொல்கிறோம். அதை நீங்கள் உங்களுடையது என சொன்னால் உங்களை பார்த்து நான்கு பேர் சிரிக்கத்தான் செய்வார்கள்” என கூறினார்.