கடந்த சில தினங்களாக 2024 மக்களவை தேர்தலுக்கு பாஜகவிற்கு எதிரான அணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அனைத்து மாநிலங்களிலும் பாஜகவிற்கு எதிரான கட்சி தலைவர்களைச் சந்தித்து பேசி வருகிறார்.
அந்தவகையில் அவர் பாஜகவில் இருந்து விலகிய பீகார் முதல்வர் நிதீஷ்குமாரை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சந்திர சேகர ராவ், பாரதிய ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்குவதே நோக்கம் என்றும் எதிர்க் கட்சிகளின் கூட்டணி தலைவர் பற்றிய அறிவிப்புக்கு தற்போது அவசரம் இல்லை என்றும் உரிய நேரத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
அந்த வகையில் வலுவான எதிரணியை உருவாக்க மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, ஹேமந்த் சோரன் போன்ற தலைவர்களை சந்தித்து பேசினார். நேற்று ஹைதராபாத்தில் உள்ள தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், சந்திர சேகர ராவ் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேசிய செயல் திட்டங்களுடன் கூடிய தேசிய கட்சியை துவங்க ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்த முடிவினை எடுக்க பொருளாதார வல்லுநர்கள், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்கள் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வர இருக்கும் சட்ட மன்ற தேர்தலில் தான் தொடங்க இருக்கும் புதிய கட்சியை போட்டியிட வைக்க சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாரதிய ராஷ்டிரித் சமித், உஜ்வால் பாரத் கட்சி, நயா பாரத் கட்சி போன்ற பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.