Skip to main content

இப்போதே சூடுபிடித்த ‘இடைத்தேர்தல் களம்’ - த.மா.கா.வும் தயாராம்

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

A hot 'by-election field'-in-the-making right now

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் த.மா.கா. போட்டியிடுவது குறித்து கட்சி தலைவர் ஜி.கே.வாசன்தான் முடிவு செய்வார் என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈரோடு விடியல் சேகர் தெரிவித்துள்ளார்.

 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த 4ந் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரசும், அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரசும் போட்டியிட்டன. அதேபோல் இந்த முறையும் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது அ.தி.மு.க., தி.மு.க. நேரடியாக வேட்பாளர்களை களத்தில் இறக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கான நிர்வாகிகளுக்கான பூத் கமிட்டி கூட்டம் 12ந் தேதி நடைபெற்றது.

 

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் கூறியதாவது, "கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெற்றிருந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோட்டில் கிழக்கு சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. த.மா.கா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் யுவராஜா குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தல் வந்துள்ளது. கூட்டணி தர்மப்படி தமிழ் மாநில காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்நிலையில், அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலம் அவகாசம் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தலைவர் ஜி.கே.வாசன் முறைப்படி கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவு செய்வார். நாங்கள் தொடர்ந்து அதிமுகவுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

 

அ.தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக ஆகிய எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பலமான எதிர்கட்சியாக உள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கடந்த 18 மாதங்களாக பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு விலக்கு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ஊக்கத்தொகை போன்றவை நிறைவேற்றப்படவில்லை. சொத்துவரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, பால் கட்டண உயர்வு, குப்பை வரியும் புதிதாக போடப்பட்டுள்ளது. ஈரோட்டில் எங்கு பார்த்தாலும் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை நாங்கள் அதிமுக தலைமையில் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை எடுத்துக் கூறுவோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இரண்டு தலைவர்கள் கூடி பேசி முடிவு செய்வார்கள். த.மா.கா.வேட்பாளர் என்றால் மீண்டும் யுவராஜா போட்டியிடுவார்." என்றார்.

 

இதன் மூலம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் த.மா.கா.வும் போட்டியிடத் தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் இப்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

 

 

சார்ந்த செய்திகள்