ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் 18 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அதில் ஈபிஎஸ், முதல்வர் ஸ்டாலினை தரம் தாழ்ந்து விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இது ஒரு இடைத்தேர்தல். இதில் அரசாங்கம் வெற்றி பெறப்போகிறதா என்பது பிரச்சனை அல்ல. ஆனால் ஏன் இந்த இடைத்தேர்தலில் இந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறோம் என்றால் கடந்த 18 மாத காலத்தில் அற்புதமான ஆட்சியை நாம் கொடுத்துள்ளோம். அதற்குரிய அங்கீகாரத்தை நீங்கள் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கூட்டம்.
ஆட்சி நடத்துவதில் எவ்வளவு சிரமங்கள் உள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். அதை உணர்ந்து அரசாங்கம் பொறுப்புடன் செயல்படுகிறது. சில எதிர்க்கட்சிகள் அதை செய்யவில்லை; இதை செய்யவில்லை என அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறது. அது உண்மைதான். ஆனால், கடவுளால் கூட அனைத்தையும் ஒரே நாளில் செய்துவிட முடியாது. அனைத்தையும் படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும். நாம் தமிழக பாஜகவிடமும் ஆளுநரிடமும் கேட்பது ஒன்றுதான். 1008 குறைகளை தமிழ்நாடு அரசின் மீது சொல்கிறீர்கள். அவை அனைத்தையும் உங்களுடன் விவாதிக்கிறோம். உண்மையாகவே குறை இருந்தால் சரி செய்யலாம். ஆனால் நீட், எய்ம்ஸ் உள்ளிட்டவற்றை நிவர்த்தி செய்ய முயற்சிக்க மறுக்கிறார்கள். நாங்கள் அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் ஆளுநர் அந்த மாளிகையில் இருக்க முடியாது.
சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை திமுக முன் மொழிகிறது என சொன்னார். அதை நாங்களே எதிர்பார்க்கவில்லை. அதேபோல் தான் நேற்றும் சொல்லியுள்ளார். தோழமைக் கட்சியின் தலைவர் இவ்வளவு வெளிப்படையாக சொன்னது இந்தியாவிலேயே முதல்வர் ஸ்டாலின் தான்” என கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.