விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசினார். அதில், பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்று தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் நடிகை காயத்ரி ரகுராம், பாஜக கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் பலர் இது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் திருமாவளவனை இந்து சமயத்திலிருந்து விலக்கி வைப்பதாக இந்து மக்கள் கட்சி சார்பில் விழா ஒன்று நடைபெற இருக்கின்றது. அதில் கள்ளகுறிச்சி உலகளந்த பெருமாள் கோவிலில் வரும் 25-ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை இந்து கோவில்கள் மற்றும் இந்து மதம் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிவரும் திருமாவளவனை இந்து சமயத்திலிருந்து சம்பிரதாய சடங்கு மூலம் விலக்கி வைக்கும் நிகழ்வு நடக்க இருப்பதாக பத்திரிகை ஒன்று அடித்து பலருக்கும் கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்த பத்திரிகையின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வில் இந்து சமய ஆர்வலர்கள், சிவனடியார்கள், ஆன்மீக வாதிகள் என பலரும் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.