Skip to main content

''பாமகவிற்கு இதுவே வாடிக்கையாகிவிட்டது... உள்ளபடியே வருத்தப்படுகிறேன்''-திருமா பேட்டி!

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

'' This has become a routine for pmk '' - thiruma Interview!

 

நடிகர் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுக்க திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அப்படத்தை வெளியிடக்கூடாது என வலியுறுத்தி கரூர் மாவட்ட பாமக மாவட்டச் செயலாளர் பிரேம்நாத், கரூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவரிடம் நேற்று மனு அளித்தார்.

 

இந்நிலையில் பாமகவின் இந்த செயல் அரசியல் ஆதாயம் தேடும் செயலாக இருக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த அவர்,  ''இது கவனயீர்ப்புக்காக செய்யப்படுகிற ஒரு அரசியலாகத்தான் தெரிகிறது. நடிகர் சூர்யாவை பொறுத்தவரை ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு  பத்தாண்டுகளாக ஏராளமான பணிகளை ஆற்றி வருகிறார். சாதி, மதம், மொழி உள்ளிட்ட வரம்புகளைக் கடந்து அனைத்து தரப்பினரின் நன்மதிப்பை பெற்று வளர்ந்து வருகிற, வளர்ந்திருக்கிற ஒரு திரைக் கலைஞர். அவருக்கு இத்தகைய அரசியல் நெருக்கடி கொடுப்பது ஏன் என விளங்கவில்லை. தொடர்ந்து இதுபோன்ற கவனயீர்ப்பு அரசியலைச் செய்வது பாமகவின் வாடிக்கையாகிவிட்டது. இது வருந்தத்தக்க நிலைப்பாடாக இருக்கிறது. உள்ளபடியே இதற்காக நான் வருத்தப்படுகிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சமூகநீதிக்கு என்ன அர்த்தம் என்று இந்தியா கூட்டணிக்கு தெரியுமா? - அன்புமணி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Anbumani question Does the India Alliance know what social justice means

சிதம்பரத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பி.கார்த்தியாயினியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  வாக்குசேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலில் இடையில் யார், யாரோ வந்து குழப்புவார்கள். இடையில் அதிமுகவினர் வந்து ஓட்டு கேட்பார்கள். ஓரு ஓட்டு கூட அதிமுகவிற்கு செல்லக்கூடாது. கடலூர் மாவட்டத்தில் பாமக இல்லை என்றால், இந்நேரம் அத்தனை இயற்கை வளங்களையும் திமுகவும், அதிமுகவும் நாசப்படுத்தியிருப்பார்கள். காவிரி டெல்டா, வீராணம் ஏரியை நாசப்படுத்தியிருப்பார்கள். 2008-ல் இங்கு பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்தார்கள். சிதம்பரம் தொகுதியில் உள்ள 25 கிராமங்கள் உள்ளிட்ட 45 கிராமங்கள் பாதிக்கும் திட்டத்தை ரூ.80 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார்கள். அதன் பிறகு நான் கிராம, கிராமமாக சென்று போராட்டம் செய்தேன். அதன் பிறகுதான் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. திமுக அத்திட்டத்தை கொண்டு வர துடித்து கொண்டிருக்கிறார்கள். பாமக இல்லை எனில் மூன்றாவது சுரங்கம் இப்பகுதியில் வந்திருக்கும்.

இத்தொகுதி எம்பி தொல்.திருமாவளவன் இத்தொகுதிக்கு ஏதாவது செய்துள்ளாரா? இங்குள்ள பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளாரா? வீராணம் ஏரி 1.50 டிஎம்சி கொண்ட தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஏரி. அந்த ஏரி இதுவரை தூர்வாரப்படவில்லை. அதுமட்டுமல்ல பாளையங்கோட்டை நிலக்கரி திட்டம் என கொண்டு வந்தார்கள். அப்போது முதன் முதல் குரல் கொடுத்து தடுத்து நிறுத்தியது இந்த அன்புமணி ராமதாஸ்தான். அப்போது திருமாவளவன் வாயை திறக்கவில்லை. திமுக கூட்டணி தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. காவிரி பிரச்சனையிலிருந்து கச்சத்தீவு பிரச்சனை வரை திமுக கூட்டணி துரோகம் செய்துள்ளது. அதற்கு உடந்தையாக திருமாவளவன் உள்ளார். இந்த தேர்தலில் சாதி பிரச்சனை கிடையாது. சமுதாய பிரச்சனை கிடையாது. நம்ம கூட்டணி, அவங்க கூட்டணி வெவ்வேறு. இன்னொரு கூட்டணி எடப்பாடி பழனிசாமி கூட்டணி உள்ளது. அந்த கூட்டணியில் ஒரு கட்சிதான் உள்ளது. தேர்தலுக்கு பிறகு அதுவும் காணாமல் போய்விடும். ஏதோ நம்ம துரோகம் பண்ணிவிட்டோம் என கூறுகின்றனர். யார் துரோகம் செய்தது. நாம் மற்றவர்களை தோலில் சுமந்து மாற்றி, மாற்றி முதல்வராக்கியுள்ளோம். எங்களை துரோகி என சொல்ல உங்களுக்கு என்ன அருகதை உள்ளது. மண்ணிற்கும், மக்களுக்கும் உழைக்கும் பாட்டாளி நாங்கள்.

இது இரண்டு சமுதாயத்திற்கான தேர்தல் அல்ல. வளர்ச்சிக்கான தேர்தல். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், 2026-ல் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சியை நாம் உறுதியாக அமைப்போம். 57 ஆண்டுகளாக இரு கட்சிகளும் தமிழ்நாட்டை நாசப்படுத்திவிட்டார்கள். இருகட்சிகளும் தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் துரோகம் செய்துள்ளார்கள். போதும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முடிவை நானும், ராமதாஸ் அவர்களும் சேர்ந்து எடுத்தோம்.

இருகட்சிகளும் ஆட்சிக்கு வந்த முதலில் உங்கள் தாத்தாவை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள். அதன் பிறகு அப்பா, கணவர், மகனை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள். தற்போது பேரப்பிள்ளைகளை மதுப்பழக்த்திற்கு அடிமையாக்கி வருகிறார்கள். இதனை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். மதுவைவிட தற்போது மோசமான பிரச்சனை உள்ளது. அமெரிக்காவில் என்ன, என்ன போதை பொருள்கள் இருக்கோ, அவையல்லாம் மாத்திரை, பவுடர் வழியில் வந்து கொண்டிருக்கிறது. அதனை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனை ஒரு வருடம் பயன்படுத்தினால், அந்த மாணவரை மீட்டெடுக்க முடியாது. இதைப்பற்றி எந்த கவலையுமில்லாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். கடலூர் தொகுதியில் நமது வேட்பாளர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். அவர் சாலையோரம் கிளி ஜோசியம் பார்த்துள்ளார். அவர் தங்கர்பச்சானை ஜெயித்து விடுவீர்கள் என கூறியுள்ளார். அடுத்த நாள் கிளி ஜோசியரை கைது செய்துள்ளனர்.

அந்தளவுக்கு திமுகவிற்கு சகிப்புத் தன்மை இல்லை. சாராயம் விற்பவன், கள்ளக்கடத்தல் பண்ணுபவர்கள், கஞ்சா விற்பவர்கள், போதை பொருள்கள் விற்பவர்கள் வெளியில் சுற்றுகிறார்கள். போதை பொருள்கள் விற்பவர் ஸ்டாலினுடன் நின்று புகைப்படும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். செய்யாற்றில் 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததுதான் இந்த கொடுங்கோல் ஆட்சி. விவசாயிகளை கடவுளாகப் பார்க்கிறேன். இது விவசாய பூமி. இந்த புண்ணியபூமியை நாசப்படுத்தும் திமுக, அதிமுக கட்சிகளை ஓரம் கட்ட வேண்டும். அதற்கு சரியான நேரம் இந்த நாடாளுமன்ற தேர்தல்.

கொள்ளிடம் ஆற்றில் 110 கிலோ மீட்டரில் நீர் ஓடுகிறது. எத்தனை முறை 10 தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தேன். காவிரியை காப்போம் நடைபயணமாக வந்து போராட்டம் நடத்தினோம். ஆனால் 87 கிலோ மீட்டர் அளவில் 20 மணல் குவாரிகள் அமைத்து நடத்தும் கொடுங்கோல் ஆட்சி, திமுக ஆட்சி. இந்த ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும். தற்போது நாம் அதனை செய்யாவிடில், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.  நிச்சயமாக இந்த தேர்தலில் பானை உடைக்கப்படும். இந்த தேர்தலில் தாமரையும், மாம்பழமும் ஒன்றாக சேர்ந்துள்ளது. இனி நீங்கள் கூறும் அத்துமீறு, அடங்கமறு என்பதெல்லாம் எடுபடாது. நான் இளைஞர்களை நல்ல வழியில் வழிநடத்தும் அரசியல் செய்கிறேன். இளைஞர்கள் அனைவரும் படித்து வேலைக்கு செல்ல வேண்டும்.  அதற்காகதான் இடஓதுக்கீடு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?  திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் தமிழ்நாட்டில் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு நிர்வாகம் செய்ய தெரியாது.

நான் திருமாவளவனை கேட்கிறேன். நீங்கள் இருக்கிற கூட்டணியில் உங்களுக்கு மரியாதை கிடைக்கிறதா? சமூகநீதி என்றால் என்ன அர்த்தம் என அந்த கூட்டணிக்கு தெரியுமா? ஸ்டாலினுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.. அவரது மகன் விளையாட்டு பிள்ளை, விளையாட்டு துறை அமைச்சராக உள்ளார். சினிமாவில் நடித்தால், போதுமா? தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு மரியாதை கொடுக்க தெரியுமா? தமிழ்நாட்டில் 34 அமைச்சர்கள் உள்ளார்கள். முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இதில் தாழ்த்தப்பட்ட, பட்டியலினத்தை சேர்ந்த 3 அமைச்சர்கள் உள்ளார்கள். ஆனால் 3 பட்டியலின  சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் 30வது இடத்தில் சி.வெ.கணேசன், 33வது இடத்தில் அமைச்சர் மதிவேந்தன், 34வது இடத்தில் அமைச்சர் கயல்விழி. இதுதான் நீங்கள் சமூகநீதிக்கு கொடுக்கும் மரியாதை.

சமூகநீதிக்கான ஓரே தலைவர் யார் என்றால் இந்தியாவிலேயே ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ்தான். வேறு யாருக்கும் தகுதி கிடையாது. 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. இதில் 3 தொகுதிகள் பெண்கள் போட்டியிடுகிறார்கள். 2 தொகுதிகள் , பட்டியலினத்திற்கு வழங்கியுள்ளோம். இதுதான் உண்மையான இடஓதுக்கீடு, உண்மையான சமூகநீதி. பாமகவிற்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த தலித் எழில்மலை, இ.பொன்னுசாமிக்கு கொடுத்தோம். இந்தியாவிலேயே ஒரே ஓரு இட ஒதுக்கீடு யாரும் கேட்காமல், போராடாமல் கிடைத்தது எதுவென்றால், நான் மத்திய அமைச்சராக இருந்த போது அகில இந்திய நுழைவுத்தேர்வில் பட்டியலின சமுதாயத்திற்கு கிடைத்ததுதான். எம்பிபிஎஸ். முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்த கட்சி பாமகதான்.

கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டி தீருவோம் என அங்குள்ள முதல்வர் சித்த ராமைய்யா செல்கிறார். ஓரே கூட்டணியில் உள்ள இங்குள்ள ஸ்டாலின், திருமாவளவன் ஏன் வாயை திறந்து கேட்கவில்லை. வாக்கிற்காக வாயை திறக்க மறுக்கிறீர்கள். பாட்டாளி மக்கள் கட்சி கொள்கையில் எள்ளவும் விட்டு கொடுக்க மாட்டோம். எந்த கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் தைரியமாக கேட்போம். கச்சத்தீவை காங்கிரஸூம், திமுகவும் தாரை வார்த்த பிறகுதான் 800 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 6500 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 1200 படகுகள் நாசப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வடலூர் வள்ளலார் பெருவெளி மையத்தை, வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதாக கைவைத்துள்ளார்கள். வள்ளலார் வாழ்ந்த அந்த மண்ணை விட்டு விட்டு வெளியில் சென்று மையத்தை கட்டுங்கள்” என்றார் அன்புமணி ராமதாஸ்.

கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, பாமக மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், பாமக மாவட்ட செயலாளர்கள் செல்வமகேஷ் (கடலூர்), ரவி (அரியலூர்), செந்தில்குமார் (பெரம்பலூர்), முன்னாள் எம்பி டாக்டர் குழந்தைவேல், தேவதாஸ் படையாண்டவர், ஜெய.சஞ்சீவி, பாஜக மாவட்ட தலைவர் கே.மருதை, ஏ.ஜி.சம்பத், சாய்சுரேஷ், பாஜக ராணுவ வீரர் பிரிவு மாநில துணைத் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியன், வே.ராஜரத்தினர், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி புரட்சிமணி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

Next Story

“தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை தி.மு.க அரசால் மட்டுமே வழங்க முடியும்” - மல்லிகார்ஜுன் கார்கே பேச்சு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே. விஷ்ணு பிரசாத் கை சினத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கடலூர் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் விஷ்ணு பிரசாதத்தையும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் தொல். திருமாவளவனையும் இரு கரம் கோர்த்து பானை மற்றும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், “இந்திய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோரின் நினைவுகளை இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். பாரதிய ஜனதா அரசு பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் ஏழை எளிய மக்களை வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட விவசாய பெருங்குடிகள் ஆகியோரின் நிலை மிகுந்த மோசமான நிலையில் உள்ளது. அவர் பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமர் ஆனதற்கு பின்பும் அடிக்கடி கூறி வருவது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும் ஒவ்வொரு குடும்பத்தாரின் வங்கி கணக்கில் 15 லட்சம் கருப்பு பணத்தை மாற்றி தருவேன் எனவும் வாக்குறுதி தந்தார். அதில் ஏதாவது ஒன்றை செய்துள்ளாரா?

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் நான் திடமாக கூறிக் கொள்வது என்னவென்றால் இரண்டு விஷயங்களை மட்டும் மக்கள் மன்றத்தில் கூற விரும்புகிறேன். ஒன்று இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்படும், மற்றொன்று அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். நான் 53 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர், எம்.பி ராஜ்யசபா உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளில் இருந்து வருகிறேன். ஆனால், இந்த ஆட்சியின் போதுதான் கவர்னர் என்ற பதவியின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குரியதாக உருவாகியுள்ளது. அவர் பட்ஜெட் கூட்டத்தொடர், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் போன்றவைகளில் எல்லை மீறுவதைக் காண முடிந்தது. 

“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

பாஜக அரசை எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மிக முக்கிய இடமாக உள்ளார். அதிலும் குறிப்பாக நீட் தேர்வு போன்றவற்ற எதிர்ப்பதில் மிக உறுதியாக உள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய உள்ள சிஸ்டத்தை நிச்சயம் மாற்றுவோம். விவசாயிகள் தற்போது மிகுந்த மோசமான நிலையில் உள்ளனர். அவர்களிடம் வாழ்வாதாரம் சிறக்க, சிறப்பு நடவடிக்கை காங்கிரஸ் அரசு நிச்சயம் மேற்கொள்ளும். தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை, தி.மு.க அரசால் மட்டுமே தர முடியும். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது .ஏன் விலை உயர்வு என்று கேட்டால் , மோடி அரசு குருடாயில் விலை உயர்வு என்கிறது. ஆனால், உலக அளவில் குரூடாயில் விலை குறைந்த போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் விலைவாசி உயர்வால் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆயிரம் மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் ஒன்றும் அசைக்க முடியாது. இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள எஸ்.சி, எஸ்.டி பிற்பட்டோர் பிரிவினருக்கான காலியிடங்களை நிச்சயம் நிரப்புவோம். இதனால் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெறுவர் எனவே அனைவரும் கை சின்னத்திற்கும் பானை சின்னத்திற்கும் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று பேசினார்.  

இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, மாநில செயலாளர் சந்திரசேகர், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.