“ஆளுநருக்கு கொடுத்த உரையில் பொய்கள் இருந்தால் அதை அவர் எப்படி படிப்பார்” என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.
திருச்சி பாலக்கரையில் பாஜக சார்பில் ‘நம்ம ஊரு மோடி பொங்கல்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளைக் கொடுத்தார். இதன் பின் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கடந்த மூன்று நாட்களாகப் பிரிவினைவாத தீய சக்திகள் ஆளுநர் மற்றும் பாஜக மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்தாண்டு நடந்த ஆளுநர் உரையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இங்கே 19 பேர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்ந்தது., கஞ்சா கடத்தல் அடிக்கடி நடக்கின்றது என்பதையும் சேர்த்து ஆளுநர் படித்திருந்தார் என்றால் முதல்வருக்கும் அரசாங்கத்திற்கும் தர்ம சங்கடம் ஆகியிருக்கும். அதனால் மிக நாகரீகமாக இந்த அரசாங்கத்திற்குத் தர்ம சங்கடம் கொடுக்க வேண்டாம் என்று அவர் அதையும் மற்ற வார்த்தைகளையும் தவிர்த்துவிட்டார். அப்பொழுது முதல்வர் என்ன செய்திருக்க வேண்டும். கவர்னருக்கு நன்றி சொல்லி இருக்க வேண்டும்.
அதேபோல் அண்ணா, ஈவேரா, கருணாநிதி இவர்களெல்லாம் கொடுத்த உற்சாக தைரியத்தில் அந்நிய முதலீட்டு மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அது பச்சைப் பொய் ஏனென்றால், சென்ற ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த அந்நிய முதலீடு 2.5 மில்லியன் டாலர். ஆனால், கர்நாடகத்தில் 18 பில்லியன் டாலர். கர்நாடகா தான் முதல் மாநிலம். அதற்கடுத்த இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அப்படி இருக்கையில் நீங்கள் ஒரு பொய்யை எழுதினால் அதை கவர்னர் எப்படி படிப்பார். மானே தேனே அப்படி எல்லாம் சொல்வதற்கு இது என்ன மானாட மயிலாடவா” எனக் கூறினார்.