ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''ஆளுநர் பயிற்சி மையம் நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. தமிழிசை அக்கா தூத்துக்குடியில் டெபாசிட் வாங்கினாரா, இல்லையா என்று கூட தெரியவில்லை. உடனே ஆளுநராகி விட்டார்கள். அதற்கு பிறகு இல.கணேசன் அவரும் ஆளுநராகிவிட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு சி.பி.ராதாகிருஷ்ணன் அவரும் ஆளுநர் ஆகிவிட்டார்.
எனக்கு தெரிந்து, விரைவில் ஓபிஎஸ் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் அதிமுகவை விரைவில் பாஜக கைப்பற்றிவிடும். எடப்பாடி விரைவில் பாஜகவின் தலைவர் ஆகிவிடுவார். சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை வாங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு மீசை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவுக்கும் உண்மையாக இல்லை. அவரை முதல்வராக்கிய சசிகலாவுக்கும் உண்மையாக இல்லை. டெல்லியில் உள்ள அவரது எஜமானர்கள் மோடி, அமித்ஷா ஆகிய இருவருக்கும் மட்டுமே எடப்பாடி பழனிசாமி உண்மையாக இருக்கிறார்'' எனப் பேசினார்.