தமிழகத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையில் அமைந்த கூட்டணி நீடிப்பதாக திமுகவும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தெரிவித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் இன்னும் இறுதி முடிவு எடுக்காமல் உள்ளன. இருப்பினும் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திக்கிறார். 23-ந் தேதி தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார் ராகுல்காந்தி. அவருக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் முக்கியப் பிரமுகர்களைச் சந்திக்கிறார். பிற்பகல் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்கிறார். கோவையில் அவருக்கு சென்னியம்பாளையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிற்பகல் 3.15 மணிவரை திறந்த வேனில் சென்று மக்களைச் சந்திக்கிறார். மாலை 5.15 மணிக்கு திருப்பூர் செல்லும் ராகுல்காந்திக்கு அவிநாசி புது பஸ் நிலையம் அருகே வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து திருப்பூர் நகரில் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திக்கிறார். பின்னர் திருப்பூர் குமரன் நினைவுச் சின்னத்துக்கு மாலை அணிவிக்கிறார். 5.45 மணி முதல் 6.45 மணிவரை தொழிலாளர்களைச் சந்திக்கிறார். அன்று இரவு திருப்பூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
24-ந் தேதி காலை ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி செல்கிறார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. 11.15 மணி முதல் 11.45 மணிவரை பெருந்துறையிலும், 12.30 மணி முதல் 12.45 மணிவரை பி.எஸ்.பார்க் பகுதியிலும் ராகுல் பிரசாரம் செய்கிறார். பிற்பகலில் அவர் நெசவாளர்களைச் சந்திக்கிறார். மாலை 3.45 மணி முதல் 4.15 மணிவரை காங்கேயத்தில் மக்களைச் சந்திக்கிறார். மாலை 4.45 முதல் 5.45 மணிவரை தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அன்று இரவு அங்கு தங்குகிறார்.
25-ந் தேதி காலை 10 மணிக்கு தாராபுரத்தில் இருந்து புறப்பட்டு 10.30 மணிக்கு கரூர் செல்கிறார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து கரூர் பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலை அருகே அவர் தொண்டர்களைச் சந்திக்கிறார். 12.30 மணியளவில் வாங்கல் பகுதியில் விவசாயப் பிரதிநிதிகளைச் சந்திக்கிறார். மாலை 3 மணி முதல் 3.30 மணிவரை பள்ளப்பட்டியிலும், 4.15 முதல் 4.30 மணிவரை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலும் மக்களைச் சந்திக்கிறார். மாலை 6 மணிக்கு மதுரையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.