50 ஆண்டுகளாக திரையில் பேசிய அரசியலை கமல் தரையில் பேச ஆரம்பித்து இருக்கிறார் என பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “ஆரம்பித்த துடிப்புக் குறையாமல், ஐந்து ஆண்டுகளைக் கடந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். உள்ளத்தில் எரியும் அறத்தழல் ஒளி குன்றாமல் பார்த்துக்கொள்வோமாக. மநீம உறவுகள், நற்பணி இயக்க நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் நிர்வாகி மற்றும் பாடலாசிரியருமான சினேகன், “மக்கள் நீதி மய்யம் துவங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவேறியுள்ளது. உலக தாய்மொழி நாள் இன்று. அதை உணர்ந்து தான் கமல்ஹாசன் 5 ஆண்டுகளுக்கு முன் இந்த நாளில் கட்சியைத் துவங்கினார். கலைத்துறை என்பது எங்களுக்கு தொழில். அரசியல் என்பது சேவை. இது கடமை, அது தொழில். நாங்கள் குழப்பிக் கொள்ளவில்லை. வெளியில் பார்ப்பவர்களுக்கு குழப்பமாக இருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது.
50 ஆண்டுகளாக திரையில் பேசிய அரசியலை கமல் தரையில் பேச ஆரம்பித்து இருக்கிறார். கலை வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. கலை மக்களின் வாழ்வியலை எப்போதும் வெளிக்காட்டுவது. மக்களின் நிலையை கலை வழியே ஆண்டாண்டு காலம் பேசுகிறார்கள். அதில் அதிகமானோர் திரையில் மட்டும் பேசிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். கமல் மக்களோடு அதை களத்தில் பேச வேண்டும் என கட்சியை ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து செய்து கொண்டு உள்ளோம்” எனக் கூறினார்.