அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும். இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது என்று மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான ராஜன் செல்லப்பா கூறினார். ராஜன் செல்லப்பா கூறிய கருத்தையே குன்னம் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரனும் கூறியுள்ளார்.
இதையடுத்து தொண்டர்கள் இனி அ.தி.மு.க. நிர்வாக முறைகளைப் பற்றியோ, தேர்தல் முடிவுகளைப் பற்றிய தங்கள் பார்வைகளைப் பற்றியோ, கட்சியின் முடிவுகளைப் பற்றியோ, பொது வெளியில் கருத்துக்களை யாரும் கூறக்கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் வரும் 12ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், காங்கேயம் எம்எல்ஏவான தனியரசு கூறுகையில், இந்த இரண்டு எம்எல்ஏக்களும் கூறிய கருத்து பரவலாக விவாதமாகியிருக்கிறது. இதுகுறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரும் ஆலோசனை நடத்துவார்கள்.
இந்த ஆலோசனையில் இதற்கு தற்போது தீர்வு கிடைக்காது. ஒற்றை தலைமை ஏற்பதாக இருந்தால் கட்சிக்குள் சங்கடங்கள் வர வாய்ப்பு உள்ளது. ஆகையால் இன்றைய சூழ்நிலையில் ஒற்றைத் தலைமை என்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லை. இந்த ஆட்சி இருக்கும் வரை அதற்கான சூழல் இல்லை. கட்சி நிர்வாகத்தை நடத்துவதிலும் அதற்கான சூழ்நிலை இல்லை. இரட்டை தலைமை இருக்கும் வரை இந்த ஆட்சி இருக்கும். ஆட்சி இருக்கும் வரைக்கும் இரட்டை தலைமை இருக்கும். ஆனால் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை மீதான விவாதம் கட்சிக்குள் இருக்கும். ஆட்சி இருக்கும் வரை அது நடக்காது. இவ்வாறு கூறினார்.