இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று துவங்கியுள்ளது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு தமிழில் தனது உரையைத் தொடங்கினார். முன்னதாக ஆளுநர் ரவிக்கு சட்டமன்ற வளாகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சட்டப்பேரவை வளாகத்தில் அவர் உரையாற்றுவதற்கான மேடையில் ஏறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார்.
ஆளுநர் ஆற்றிய உரையில் அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளை தவிர்த்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக, 'திராவிட மாடல்' என்ற வார்த்தை ஆளுநரால் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் 'தமிழ்நாடு கவர்ன்மென்ட்' என்ற வார்த்தைக்குப் பதில் 'திஸ் கவர்ட்மென்ட்' என மாற்றியுள்ளார். மேலும் பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பெயரும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளியேறின. தொடர்ந்து தமிழக முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போதே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.
இந்நிலையில், ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டு வந்த போது அதை ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர் ஆன்லைன் நிறுவன உரிமையாளர்களோடு கலந்து உரையாடுகிறார். இது மக்கள் விரோதமானது. இங்கு பலியான நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழின் சங்ககால இலக்கியங்களில் அனைத்து நூல்களிலும் தமிழ்நாடு என்று தான் இருந்தது. அதை மாற்றி தமிழகம் என்று அவர் பதிவு செய்கிறார். தமிழ்நாடு என்பது சரியானது அல்ல, தமிழகம் என்பது சரியானதாக இருக்கும் என்ற ஒரு கருத்தை இங்கு விதைக்க முற்படுகிறார். இது ஏற்றுக் கொள்ள முடியாதது.
தமிழ்நாடு என்னும் சொல்லை மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் குரலாக இருந்து ஒலிக்கிற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம். எங்கள் உணர்வை வெளிப்படுத்துவதற்காக இன்று ஆளுநர் ரவி வாசித்த உரை, தமிழ்நாடு அரசின் உரையாக இருந்தாலும், அதை வாசிப்பது ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பலின் குரலாக ஒலிக்கும் சனாதனம் தான் சரியானது என்றும், தமிழக சட்டமன்றம் இயற்றிய சட்டத்தை மதிக்கத் தவறுகின்ற ஆளுநருக்கு அவர் மொழியில் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறோம்” எனக் கூறினார்.