சென்னையில் கடந்த ஆண்டு செப் 5 ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு உயர்கல்வி அளித்தல், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பப்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.
புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 1,16,342 மாணவிகள் பயனடைந்தனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் இந்து கல்லூரியில் இரண்டாம் கட்டமாக புதுமைப்பெண் திட்டத்தினை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் இரண்டாம் கட்டமாக 1,04,347 மாணவிகள் பயன்பெற உள்ளனர். இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் சாமு.நாசர், நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கல்வியை அனைவருக்கும் சமமானதாக ஆக்க முயற்சி செய்து வருகிறோம். இந்தியாவில் முதன்முறையாக கலைஞரின் ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தது. மகளிரின் உரிமைக்காக நாம் எவ்வளவோ போராடியுள்ளோம். அதுமட்டுமில்லாமல் மகளிர் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் மகளிர் சுய உதவிக்குழு திட்டம் கலைஞரின் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மகளிர் சுய உதவிக்குழுக்களை ஒவ்வொரு மாவட்டமாக சென்று நான் உருவாக்கினேன். இப்பொழுது ஆட்சிக்கு வந்த உடன் மகளிருக்கு தான் முதல் கையெழுத்து. இந்த வரிசையில் தொடங்கப்பட்ட திட்டம் தான் இந்த புதுமைப் பெண் திட்டம். பல்வேறு சிரமங்களுக்கு இடையில் கல்வி பயின்று வரும் அரசுப்பள்ளி மாணவிகள் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த திட்டம்.
புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகை பெற்றுக் கொண்டு இருந்தாலும் இந்த திட்டத்தின் மூலம் கூடுதலாக பெறுவார்கள். கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வியைத் தொடரமுடியாமல் கைவிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் தங்களது உயர்கல்வியை பயில தொடங்கியுள்ளனர். இதுவே இத்திட்டத்தின் வரவேற்புக்கும் வெற்றிக்கும் சான்றாக அமைந்துள்ளது” என்றார்.